
கோலாலம்பூர், செப்டம்பர் 4 – மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும்
பொருட்டு நாடு முழுவதிலும் தங்கும் வசதிகளைக் கொண்ட 200 பள்ளிகளில் சி.சி.டி.வி எனப்படும் ரகசிய கண்காணிப்பு கேமராக்களை கல்வி அமைச்சு பொருத்தும் என கல்வித்துறையின் தலைமை இயக்குநர் அஷாம் அகமட் ( Azam Ahmad ) தெரிவித்தார்.
தனிப்பட்ட பள்ளிகளின் தேவைகள் மற்றும் மாணவர் எண்ணிக்கையைப் பொறுத்து 3 மில்லியன் ரிங்கிட் செலவிலான இத்திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்படும் என்பதோடு , பெரிய தங்கும் விடுதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அஷாம் கூறினார்.
கழிப்பறைகள் போன்ற இடங்களில் சி.சி.டி.வி கேமராக்களை கண்மூடித்தனமாக பொருத்த முடியாது. மாணவர்களின் தனியுரிமையை மீற நாங்கள் விரும்பவில்லை. கட்டுப்படுத்த வேண்டிய சட்டங்கள் உள்ளன, எனவே நாம் இந்த விவகாரத்தில் கவனமாக செயல்பட வேண்டியுள்ளதாக இன்று கோத்தா பாருவில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்குப் பிறகு அஷாம் இத்தகவலை வெளியிட்டார்.
மலேசிய இடைநிலைப் பள்ளிகளின் முதல்வர்கள் குழுவின் ஆலோசனையின் அடிப்படையில், விடுதிகளில் வார்டன்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதோடு இது அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வரப்படும் என அவர் கூறினார்.