
கோலாலம்பூர், ஆகஸ்ட்-9- அமெரிக்க மத்திய ரிசர்வ் வட்டி விகிதம் குறையலாம் என கணிக்கப்படுவதால்,தங்கத்தின் விலை செப்டம்பரில் மேலும் 10% உயரக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்க டாலருக்கும் மலேசிய ரிங்கிட்டுக்கும் இடையிலான வட்டி விகித வேறுபாடு குறைவதால் தங்கத்தின் விலைகள் தொடர்ந்து உயரும் சாத்தியம் உள்ளது; இதனால் தங்கத்திற்கான தேவை அதிகரிப்பதாக, MGA எனப்படும் மலேசிய தங்கச் சங்கத்தின் தலைவர் Datuk Seri Louis Ng கூறினார்.
தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,370 டாலராக உள்ளது; ஆண்டுத் தொடக்கத்தில் 2,630 டாலராக இருந்த விலையை விட இது 28% அதிகமாகும்.
இந்த அதிகரிப்பு புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் உலகளாவிய சந்தை நிச்சயமற்ற தன்மையால் உந்தப்பட்டது. எனினும் கடந்த 3 மாதங்களில் தங்கத்தின் விலை பெரிய மாற்றங்களின்றி சீராக இருந்தது.
இந்நிலையில் அடுத்த மாதம் அமெரிக்க வட்டி விகிதம் குறையும் பட்சத்தில் தங்க விலை உயருவதைத் தவிர்க்க முடியாது என, Louis Ng சொன்னார்.
அவ்வகையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை உயர்வு 300 முதல் 400 டாலர் வரை இருக்கலாம் என்றார் அவர்.