ஈப்போ, செப்டம்பர் -13 – ஈப்போ, தஞ்சோங் ரம்புத்தானில் காரொன்று தடம்புரண்டு கோயிலை மோதியச் சம்பவத்தில், காரோட்டி மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படுவதை போலீஸ் மறுத்துள்ளது.
41 வயது அக்காரோட்டி உண்மையில் ஓர் இனிப்பு நீர் நோயாளி.
அவருக்கு hipoglisemia எனும் இரத்த சர்க்கரைக் குறைவின் அறிகுறிகள் இருந்ததால், சம்பவத்தின் போது சுயநினைவை இழந்தார் என, பேராக் போலீஸ் தலைவர் டத்தோ அசிசி மாட் அரிஸ் (Azizi Mat Aris) தெரிவித்தார்.
தஞ்சோங் ரம்புத்தான் கிளினிக்கிலிருந்து Changkat Kinding செல்லும் வழியில், அவர் திடீரென சுயநினைவை இழந்ததால் கார் கட்டுப்பாட்டை இழந்து தடம்புரண்டு கோயில் தூணில் மோதி நின்றது.
அதில் எவருக்கும் காயமேற்படவில்லை.
என்றாலும் வாகனத்தைக் கட்டுப்படுத்த தவறி விபத்தை ஏற்படுத்தியதன் பேரில் அவ்வாடவர் விசாரிக்கப்படுகிறார்.
பொதுச் சேவை ஊழியரரான அவருக்கு இனிப்பு நீர் இருப்பது மருத்துவ அறிக்கையில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
எனவே, உண்மைத் தெரியாமல் அவர் மதுபோதையிலிருந்ததாக செய்தி பரப்புவதை நெட்டிசன்கள் நிறுத்திக் கொள்ள வேண்டுமென டத்தோ அசிசி கேட்டுக் கொண்டார்.