
கோலாலம்பூர், டிசம்பர்-9 – 2018-ஆம் ஆண்டு போலீஸ் தடுப்புக் காவலில் இருந்த போது S. தனபாலன் எனும் வர்த்தகர் மரணமுற்றதற்காக அவரின் குடும்பத்துக்கு RM1.1 மில்லியன் இழப்பீடு வழங்குமாறு, போலீஸ் படையும் அரசாங்கமும் உத்தரவிடப்பட்டுள்ளன.
அவரின் மனைவி V. சாந்தி மற்றும் மாமனார் P. Vathian இருவருக்கும் கவனக்குறைவுக்கான பொது இழப்பீடாக RM500,000, அனுபவித்த வலி வேதனைக்கான இழப்பீடாக RM200,000, உயிர் இழப்புக்காக RM30,000, வாழ்க்கைப் பொறுப்புக்கான இழப்பீடாக RM414,000, மற்றும் இறுதிச்சடங்கு செலவுக்கான சிறப்பு இழப்பீடாக RM 10,000 வழங்க, ஷா ஆலாம் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
குடும்பத்துக்கு மொத்த இழப்பீடும் தரப்படும் வரை, தனபாலன் இறந்துகிடந்த நாளான 2018 ஏப்ரல் 17-ஆம் தேதியிலிருந்து கணக்கிட்டு ஆண்டுக்கு 5% வட்டியை அரசாங்கம் கொடுக்க வேண்டுமென்றும் நீதிபதி அறிவித்தார்.
வாதித் தரப்புக்கு செலவுத் தொகையாக RM7,000 வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
திட்டமிட்ட குற்றச்செயல் கும்பல் நடவடிக்கையில் ஈடுபட்ட சந்தேகத்தில் 2018 மார்ச் 29-ஆம் தேதி SOSMA சட்டத்தின் கீழ் தனபாலன் தடுத்து வைக்கப்பட்டார்.
இந்நிலையில், ஏப்ரல் 17-ஆம் நாள் இரவு ஷா ஆலாம் போலீஸ் தலைமையகத்தில் மயங்கி விழுந்து, மருத்துவனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட போது அவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, பணியில் அலட்சியமாகவும் முறைகேடாகவும் இருந்ததாகக் கூறி சாந்தியும் அவரின் தந்தையும் 2021-ஆம் ஆண்டு 11 போலீஸ்காரர்கள், தேசியப் போலீஸ் படைத் தலைவர் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தனர்.
2022-ல் உயர் நீதிமன்றம் அவ்வழக்கை தள்ளுபடி செய்த நிலையில், போலீஸின் கவனக்குறைவே தனபாலனின் மரணத்துக்குக் காரணம் என தீர்ப்பளித்து 2023-ல் மேல்முறையீட்டு நீதிமன்றம் அக்குடும்பத்துக்கு சாதகமாகத் தீர்ப்பளித்தது.
அதை எதிர்த்து கூட்டரசு நீதிமன்றம் சென்ற போலீஸும் அரசாங்கமும் கடந்தாண்டு அம்முயற்சியில் தோல்வி கண்டன.



