பெட்டாலிங் ஜெயா, டிசம்பர்-24 – தனது நிர்வாணப் புகைப்படங்களை மாணவர்களுடன் பகிர்ந்ததாகப் புகாரை எதிர்நோக்கியுள்ள பேராசிரியரை, மலாயாப் பல்கலைக்கழகம் பணி இடைநீக்கம் செய்துள்ளது.
பல்கலைக்கழக வளாகம் மாணவர்களுக்குத் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை தமது தரப்பு உறுதிச் செய்யுமென்றும், அறிக்கையொன்றில் அது கூறியது.
நடத்தைத் தவறுவோர் யாராக இருந்தாலும், அவர்களின் பதவி, பொறுப்பு, அந்தஸ்து கருதாமல் கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதும் அவற்றில் அடங்குமென தெரிவிக்கப்பட்டது.
விசாரணை முடியும் வரை சம்பந்தப்பட்ட பேராசிரியரை இடைநீக்கம் செய்யக் கோரும் மகஜர், கடந்த வெள்ளிக் கிழமை பல்கலைக்கழக நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாணவர்கள் சார்பில், UMFC எனப்படும் UM Feminism Club-பின் தலைவர் Chin Jes மற்றும் பாலினப் படிப்பு முதுகலைப் பட்டதாரி எஸ். இந்திரமலர் பல்கலைக் கழக நெறிமுறைப் பிரிவிடம் அதனை வழங்கினர்.
WAO எனப்படும் மகளிர் உதவி அமைப்பு, Suaram என்றழைக்கப்படும் மலேசிய மக்கள் குரல் உள்ளிட்ட 27 அரசு சார்பற்ற அமைப்புகள் அந்த மகஜரை ஆதரித்திருந்தன.
மலாயாப் பல்கலைக்கழகத்தின் பெயரைக் கெடுக்கும் வகையிலான பாலியல் தொல்லைப் புகார்கள் குறித்து உடனடி விசாரணை நடத்துமாறு, உயர் கல்வி அமைச்சர் டத்தோ ஸ்ரீ சா’ம்ரி அப்துல் காடிரும் முன்னதாக உத்தரவிட்டிருந்தார்.