கோலாலம்பூர், நவம்பர்-25 – தனியார் துறை ஊழியர்கள் பணி ஓய்வுப் பெறும் வயதை அடைந்த பிறகும், அவர்களுக்கு சமூகப் பாதுகாப்பு கிடைத்திட அரசாங்கம் தொடர்ந்து போராடும்.
பணி ஓய்வு வயதை அடையும் தனியார் துறை ஊழியர்களுக்கு சமூகப் பாதுகாப்பை ஏற்படுத்தித் தரும் அரசாங்கத்தின் முயற்சி குறித்து, தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் மக்களவையில் எழுப்பிக் கூடுதல் கேள்விக்கு, மனிதவள துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அப்துல் ரஹ்மான் மொஹமட் (Datuk Seri Abdul Rahman Mohamad) அவ்வாறு பதிலளித்தார்.
சமூகப் பாதுகாப்பு நிறுவனமான சொக்சோ சந்தாத்தாரர்களில் ஏராளமானோர், பணி ஓய்வுக்குப் பிறகு சமூகப் பாதுகாப்பைக் கொண்டிருக்கவில்லை என்பதை அரசாங்கம் அறியுமென, துணையமைச்சர் கூறினார்.
எனினும் தற்போதைக்கு அமைச்சின் கவனமெல்லாம்
வேலையின் போது நிகழாத பேரிடர்களுக்கும் சொக்சோ பாதுகாப்புக் கிடைப்பதை உறுதிச் செய்ய, 1969-ஆம் ஆண்டு தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்துவதில் தான் உள்ளது.
அதற்கு அமைச்சரவையும் கொள்கையளவில் இணங்கியுள்ளது.
அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் சட்டத் திருத்தப் பரிந்துரை அடுத்த மக்களவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படும் என துணையமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
இவ்வேளையில், காப்புறுதிப் பாதுகாப்புக் கோரிக்கைகளை அனுப்ப ஏதுவாக வயது வரம்பை 60-லிருந்து 65-தாக அதிகரிக்க அரசாங்கம் எண்ணம் கொண்டுள்ளதா என சரவணன் கேட்ட அசல் கேள்விக்கு, அதற்கு வயது வரம்பு ஏதும் இல்லை என துணையமைச்சர் பதிலளித்தார்.
எனவே, காப்புறுதி பாதுகாப்பு வைத்திருப்போர் தங்களின் உரிமையை நிலைநாட்ட வாய்ப்பு இருப்பதாக துணையமைச்சர் கூறினார்.