தமிழகத் தேர்தல் 2026: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக

தமிழகத் தேர்தல் 2026: திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிக
சென்னை, பிப்ரவரி-19,
தமிழக சட்டமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என இழுபறியில் இருந்த விஜயகாந்தின் தேமுதிக கட்சி, ஆளும் திமுகவுடன் அதிகாரப்பூர்வமாகக் கூட்டணியில் இணைந்துள்ளது.
விஜயகாந்தின் மறைவுக்குப் பிறகு கட்சியை வழிநடத்தி வரும் அவரின் மனைவி பிரேமலதா, இன்று சென்னையில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினைச் சந்தித்து கூட்டணியை உறுதிச் செய்தார்.
இதன் மூலம், தேமுதிக அமைக்கப்பட்ட 20 ஆண்டுகளில் முதன் முறையாக அக்கட்சி திமுகவுடன் கூட்டணி வைக்கிறது.
இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, 2016-லேயே அமைந்திருக்க வேண்டிய கூட்டணி சற்று தாமதமாக அமைந்திருப்பதாக் குறிப்பிட்டார்.
இதனிடையே, தேமுதிக, திமுக பக்கம் போன செய்தி வெளியான கையோடு, “ கேப்டனின் ஆன்மா மன்னிக்காது” என தமிழக பாரதீய ஜனதா கட்சி X தளத்தில் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தன் வாழ்நாள் முழுவதும் தீய சக்தி திமுகவை எதிர்த்து மக்கள் பணியாற்றியவர் விஜயகாந்த். இதனால் அவருக்கும் தேமுதிகவுக்கும் கொடுமைகளையும் அவமானங்களையும் திமுக உருவாக்கியது; அப்படிப்பட்ட கட்சியுடனேயே இன்று தேமுதிக கூட்டணி வைத்துள்ளது” என அப்பதிவு குறிப்பிட்டது.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் அதிமுக -பாஜக முயற்சிக்கு, தேமுதிகவின் வரவு வலுசேர்க்கும் என நம்பியிருந்த பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள விரக்தியின் அடையாளமாக இப்பதிவுப் பார்க்கப்படுகிறது.
2006 தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு ஒரே இடத்தில் வென்று சட்டமன்றத்திற்குள் நுழைந்த விஜயகாந்த், 2011-ல், ஜெயலலிதா தலைமையில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 29 இடங்களில் வெற்றிப் பெற்று எதிர்கட்சித் தலைவரானது வரலாறு.



