
பட்டவொர்த் – ஜூலை-15 – அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெறும் ஒரு சமய விழாவில் கலந்து கொள்வதற்காக தனது கடப்பிதழைத் தற்காலிகமாகப் பெறும் முயற்சியில், பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் Dr பி. ராமசாமி வெற்றிப் பெற்றுள்ளார்.
கடப்பிதழை விடுவிக்கக் கோரி ராமசாமி தாக்கல் செய்த மனுவை பட்டவொர்த் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று ஏற்றுக் கொண்டது.
ஆகஸ்ட் 2 முதல் 8 வரை ராமசாமி தமிழகத்திற்குப் பயணிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியதாக, அவரது வழக்கறிஞர் ஷம்ஷெர் சிங் திண்ட் ( Shamsher Singh Thind) தெரிவித்தார். ராமசாமி தனது குடும்பத்தினருடன் தமிழ்நாட்டின் வெள்ளக்கோவிலில் உள்ள ஒரு கோவிலில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்வார்.
நாடு திரும்பியதும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி காலை 8 மணிக்குள் கடப்பிதழை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் அவர் பணிக்கப்பட்டுள்ளார். இவ்வேளையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC ராமசாமி வெளிநாடு செல்ல விதித்தத் தடையை அகற்றக் கோரியும் நீதிமன்றத்திடம் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், அப்பயணத் தடை MACC-யின் உத்தரவின் பேரில் குடிநுழைவுத் துறையால விதிக்கப்பட்டதாகும் ; எனவே அதனை அகற்ற நீதிமன்றத்திற்கு அதிகாரமில்லை என, செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி கூறியதாக, ஷம்ஷெர் தெரிவித்தார்.
உரிமைக் கட்சியின் தலைவருமான ராமசாமி, பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் 850,000 ரிங்கிட்டை நம்பிக்கை மோசடி செய்ததாக, 17 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
அவையனைத்தையும் மறுத்து விசாரணைக் கோரியுள்ள ராமசாமி, 78,000 ரிங்கிட் ஜாமீனில் வெளிவந்துள்ளார். அவ்வழக்கு வரும் செப்டம்பர் 10-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.