
சென்னை, மார்ச்-16-பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறுகிறது.
ஒரே கட்டமாக மாநிலம் முழுவதும் அன்றைய தினமே அனைத்து 234 தொகுதிகளுக்கும் வாக்குப் பதிவு நடைபெறுமென, இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குகள் மே 4-ஙாம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
இவ்வேளையில் அண்டை மாநிலமான புதுச்சேரியில் ஏப்ரல் 9-ஆம் தேதியே ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது.
தமிழகத்தில் 5.67 கோடி பதிவுப் பெற்ற வாக்காளர்கள் இருக்கும் வேளை, புதுவையில் 9.44 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆளும் திமுக, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக + பாரதீய ஜனதா கூட்டணி, சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவற்றுடன், புதிதாக அரசியலில் நுழைந்துள்ள நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஆகிய தரப்புகளுக்கு இடையே 4 முனைப் போட்டியாக தற்போதைய நிலவரப்படி இத்தேர்தல் விளங்கவுள்ளது.
வரலாற்றில் முதல் தடவையாக தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஆட்சியில் அமரும் வேட்கையில் திமுக உள்ளது.
அதே சமயம், 5 ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆட்சியைப் பிடிக்க BJP துணையுடன் அதிமுக மும்முரம் காட்டி வருகிறது.
யாருடனும் கூட்டணி சேராமல் – கொள்கை மாறாமல் மீண்டும் தனித்தே நிற்கும் நாம் தமிழர் கட்சி, இம்முறையாவது சட்டமன்றத்தில் கணக்கைத் தொடங்கி விட நம்பிக்கைக் கொண்டுள்ளது.
அதிமுக பஜக கூட்டணியில் விஜய் இணையக்கூடும் என வதந்திகள் பரவிவந்தாலும் இவர்களுக்குக் கடும் போட்டியாக, எடுத்த எடுப்பிலேயே முதல்வராகும் கனவில் விஜய் களத்தில் தற்போது வரை நிற்கிறார்.
இரு திராவிட கட்சிகளையும் ஒதுக்கி விட்டு, தங்களை ஆள விஜய்க்கு தமிழக மக்கள் சிவப்புக் கம்பளம் விரிப்பார்களா? அல்லது சீமானுக்கு ஒரு வாய்ப்புக் கொடுப்பார்களா? அல்லது மீண்டும் ஸ்டாலினுக்கோ அல்லது எடப்பாடிக்கோ வாய்ப்புக் கொடுப்பார்களா என்பது மே 4-ஙாம் தேதி தெரிந்து விடும்…


