தமிழக சதுரங்க வீராங்கனை வைசாலியிடம் கைக்குலுக்க மறுத்த உஸ்பெகிஸ்தான் வீரர்

ஆம்ஸ்டர்டாம், ஜனவரி-28 – நெதர்லாந்தில் நடைபெற்று வரும் சதுரங்கப் போட்டியில், தமிழக கிராண்ட் மாஸ்டரும் பிரக்ஞானந்தாவின் சகோதரியுமான வைஷாலியுடன், இஸ்லாமியப் போட்டியாளர் கைக்குலுக்க மறுத்த சம்பவம் சர்ச்சையாகியுள்ளது.
உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் Nodirberk-குடன் வைஷாலி கைக்குலுக்க முயன்ற போது, அதை மறுக்கும் விதமாக அவர் கையைக் காட்டினார்.
வைஷாலிக்கு அது தர்மசங்கடமாக அமைந்த நிலையில், சமூக ஊடகங்களில் அவ்விவகாரம் சர்ச்சையாக வெடித்தது.
மத ரீதியான காரணங்களால் தான் வைஷாலிக்குக் கைக்கொடுக்கவில்லை என்றால், ஏற்கனவே ஒரு பெண் போட்டியாளருடன் கைக்குலுக்கியது எப்படி என வலைத்தளவாசிகள் கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.
இந்நிலையில், தனது X தளத்தில் Nodirberk அது குறித்து விளக்களித்துள்ளார்.
“ஓர் இஸ்லாமியரான நான், பெண்களைத் தொட மாட்டேன் என்பதை இங்கே தெளிவுப்படுத்த விரும்புகிறேன்; ஆனால் 2023-ல் திவ்யா என்ற போட்டியாளருடன் நான் கைக்குலுக்கியது தவறு தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன்” என்றார் அவர்.
தம்மால் கைக்குலுக்க இயலாது என்பதை வைஷாலியிடம் போட்டிக்கு முன்பாகவே சொல்லமுடியாமல் போய்விட்டதாக Nodirberk கூறினார்.
மற்றபடி வைஷாலியை அவமானப்படுத்துவது தன் நோக்கமல்ல; அவரையும் அவரின் சகோதரரையும் தாம் பெரிதும் மதிப்பதாகக் கூறிய Nodirberk, தமது அச்செயல் வைஷாலியைப் பாதித்திருந்தால் அதற்கு மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகச் சொன்னார்.