
புத்ராஜெயா, ஜனவரி-5,
2026 புத்தாண்டை ஒட்டி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவை, மக்கள் நலத் திட்டங்களையும், நிறுவன சீர்த்திருத்தங்களையும் உட்படுத்தியுள்ளன.
முக்கியமாக தமிழ்ப் பள்ளிகளின் தரமுயர்த்தும் பணிகளுக்கு 50 மில்லியன் ரிங்கிட்டும், சீன பள்ளிகளுக்கான மேம்பாட்டு நிதியாக 80 மில்லியன் ரிங்கிட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் one-off முறையில் 100 ரிங்கிட் SARA உதவி பிப்ரவரி 9 முதல் அடையாள அட்டையில் சேர்க்கப்படும்.
அதே சமயம் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான மாதாந்திர SARA உதவி, வரும் ஜனவரி 9 முதல் கட்டம் கட்டமாக வழங்கப்படும்.
2026-ஆம் ஆண்டுக்கான STR ரொக்க உதவியின் முதல் கட்ட தொகை பணம் ஜனவரி 20 முதல் வழங்கப்படும்.
இவ்வேளையில், மாணவர்களுக்கான 150 ரிங்கிட் பள்ளி தொடக்க உதவி நிதியை, புதியப் பள்ளி தவணை தொடங்கியதும் அந்தந்தப் பள்ளிகளில் பெற்றோர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மடானி ரஹ்மா விற்பனை ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் வரும் ஜனவரி 9 முதல் மாதம் 3 முறை நடைபெறும் என்றும் பிரதமர் அறிவித்தார்.
இதனிடையே, பிரதமர் பதவிக்காலத்தை 10 ஆண்டுகளாக கட்டுப்படுத்தும் சட்ட மசோதாவும் இந்த நாடாளுமன்ற அமர்விலேயே தாக்கல் செய்யப்படும் என்றார் அவர்.
அதோடு, தேசிய சட்டத் துறைத் தலைவர் மற்றும் அரசு தரப்பு தலைமை வழக்கறிஞர் பொறுப்புகளுக்கான அதிகாரங்களைப் பிரிப்பது தொடர்பான சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்படுகிறது.
தவிர, தகவல் சுதந்திர மசோதாவும் இவ்வாண்டிலேயே நிறைவேற்றப்படும் என அன்வார் அறிவித்தார்.



