தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகம் கல்வி அமைச்சருடன் முக்கியக் கலந்துரையாடல்

கோலாலாம்பூர், ஜனவரி-30 – மலேசியத் தமிழ்ப் பள்ளித் தலைமையாசிரியர் கழகம், ஜனவரி 28 தொடங்கி 2 நாட்களுக்கு கோலாலம்பூரில் உள்ள கிறிஸ்டல் கிரவுன் தங்கும் விடுதியில் சந்திப்புக் கூட்டத்தை நடத்தியது.
முதல் அமர்வில் தனியார் கல்வி நிறுவனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
அறிவியல் விழா, இளைஞர் தன்னாளுமை திட்டம், ICT, சூரிய சக்தி திட்டம் மற்றும் மாணவர் பாதுகாப்பு திட்டம் போன்ற முயற்சிகள் தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆதரவாக அதில் முன்வைக்கப்பட்டன.
முக்கிய அம்சமாக, கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக்குடன் கலந்துரையாடல் நடைபெற்றது.
அதன் போது, மலேசியாவின் 528 தமிழ்ப்பள்ளிகளின் சாதனைகளை அவர் பாராட்டி, ஆண்டுக்கு இருமுறை சந்திப்பை வழக்கமாக்குவதாக உறுதியளித்தார்.
கலந்துரையாடலை ஏற்பாடு செய்த மலேசியத் தமிழ்ப்பள்ளித் தலைமையாசிரியர் கழகத் தலைவர் பழனி சுப்பையா தலைமையிலான குழுவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, தமிழ்ப் பள்ளிகளின் கல்வியை வலுப்படுத்த Bicara MADANI அமர்வுகள் ஆண்டுதோறும் நடைபெறும் எனவும் ஃபாட்லீனா கூறினார்.
தவிர, 2026–2036 மலேசிய கல்வி சீர்திருத்தத் திட்டத்தில் தமிழ்ப் பள்ளிகள் பின்தங்காமல் இருக்க, அவற்றின் தனித்துவம், அடைவுநிலை மற்றும் வலிமை மேம்படுத்தப்படும் என்றார் அவர்.
இவ்வேளையில், அன்றிரவு, சிறப்பு விருந்துபசரிப்பில் கலந்து கொண்ட கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ, தமிழ்ப்பள்ளிகளை பாதுகாக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
இரண்டாவது நாளில் நடைபெற்ற கழக முதன்மை நிர்வாகக் கூட்டத்தில், தலைமையாசிரியர்களுக்கான தலைமைத்துவக் கருத்தரங்கு, ஆசிரியர்களுக்கான செயல்வழி ஆய்வு உருவாக்கம் மற்றும் தேசிய அளவிலான மாணவர் போட்டிகள் திட்டமிடப்பட்டன.
தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டுக்காக கல்வி அமைச்சுடன் இணைந்து செயல்பட கழகம் உறுதியளித்துள்ளதாக பழனி சுப்பையா கூறினார்.



