
கோலாலம்பூர், ஜனவரி-14 – நாட்டில் உள்ள தமிழ்ப் பள்ளிகளில் முதலாமாண்டு மாணவர்களின் எண்ணிக்கைத் தொடர்ந்து சரிவு கண்டு வருகிறது.
அதோடு, 528 தமிழ்ப் பள்ளிகளில், சுமார் 150 பள்ளிகளில் 30 மாணவர்களுக்கும் குறைவாகவே உள்ளது சமூகத்தில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், உரிமைக் கட்சியின் தலைவர் பேராசிரியர் Dr பி. ராமசாமியோ, இந்த சரிவு மாற்ற முடியாத ஒன்றல்ல எனக் கருதுகிறார்.
அரசாங்கம் மற்றும் சமூகத்தின் ஆதரவுடன், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்வித் தரம் மேம்படுத்தப்பட்டால், பெற்றோர்கள் நிச்சயம் மீண்டும் நம்பிக்கையுடன் குழந்தைகளை தமிழ்ப் பள்ளிகளில் சேர்ப்பார்கள்.
பினாங்கில், தமிழ்ப் பள்ளிகள் மேம்படுத்தப்பட்டபோது மாணவர் சேர்க்கையும் அதிகரித்ததை, அம்மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வருமான ராமசாமி சுட்டிக் காட்டினார்.
சீனப் பள்ளிகளால் மலாய்க்கார மாணவர்களை ஈர்க்க முடிகிறது என்றால், வசதிகள் மற்றும் கல்வியில் தரம் உயர்த்தப்பட்டால் தமிழ்ப் பள்ளிகளாலும் இந்தியர் அல்லாத மாணவர்களை ஈர்க்க முடியும்.
இந்நிலையில் குறைவான மாணவர் எண்ணிக்கையுள்ள பள்ளிகளை மூடுவதற்குப் பதிலாக, அவற்றின் உரிமங்களை நகர்ப்புறங்களில் புதியப் பள்ளிகளுக்கு மாற்றலாம் எனவும் இவர் ஆலோசனைக் கூறுகிறார்.
தமிழ்ப் பள்ளிகள் இந்நாட்டு இந்தியச் சமூகத்தின் அரசியல் உரிமையும் கலாச்சார தூணும் ஆகும்.
அரசாங்கம் மனது வைக்க வேண்டும்; அதே சமயம் சமூகத் தலைவர்களின் கடப்பாடு, பொது அமைப்புகளின் பங்களிப்பும் இருந்தால், தமிழ்ப் பள்ளிகள் மீண்டும் உயிர்ப்புடன், பெருமைக்குரிய கல்வி நிலையங்களாக மாற முடியும் என ராமசாமி நம்பிக்கைத் தெரிவித்தார்.



