
கோலாலம்பூர், ஜன 5 – தமிழ்ப்பள்ளி மேம்பாட்டுப் பணிகளுக்காக 50 மில்லியன் ரிங்கிட் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை மலேசியத் தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியம் வரவேற்றுள்ளது.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வழங்கியிருக்கும் இந்த இரண்டாவது சிறப்பு நிதியைக் கொண்டு அடையாளம் காணப்பட்டுள்ள இடமாற்ற பள்ளிகளின் பணிகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டுமென மலேசிய தமிழ்ப்பள்ளி மேலாளர் வாரியக் கூட்டமைப்பின் செயலாளர் சுப்ரமணியம் ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி 16 ஆம்தேதி கூட்டமைப்பு வழங்கிய 5 தமிழ்ப்பள்ளிகளுக்கான இடமாற்ற பரிந்துரை இந்நிதியை கொண்டு மேற்கொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கையாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
சுங்கைப் பூலோ நாடாளுமன்ற தொகுதியிலுள்ள RRI தமிழ்ப்பள்ளி, ஜெம்போல் நாடாளுமன்ற தொகுதியிலுள்ள பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி, அலோர் காஜா நாடாளுமன்ற தொகுதியிலுள்ள கெமுனிங் KRU தோட்ட தமிழ்ப்பள்ளி, ஜோகூர் சிகமாட்டிலுள்ள சுங்கை மூவார் தோட்ட தமிழ்ப் பள்ளி, சுங்கை சிப்புட்டிலுள்ள சங்காட் சாலாக் தோட்ட தமிழ்ப்பள்ளி ஆகியவையே இடமாற்ற பரிந்துரை செய்யப்பட்ட அந்த ஐந்து தமிழ்ப் பள்ளிகளாகும்.
இந்த சிறப்பு நிதி வழங்கிய பிரதமருக்கும் கல்வி அமைச்சர் பாட்லீனா சீடேக்கிற்கும் , துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ மற்றும் பிரதமர் அலுவலகத்தின் சிறப்பு பணிகளுக்கான அதிகாரி சண்முகம் ஆகியோருக்கும் கூட்டமைப்பின் சார்பில் சுப்ரமணியம் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.



