
கோலாலம்பூர், பிப்ரவரி-17 – நீண்ட பள்ளி விடுமுறைக்குப் பிறகு 2025 கல்வியாண்டு இன்று தொடங்குகின்றது.
இந்நிலையில் தங்களின் கல்விப் பயணத்தை தமிழ்ப் பள்ளி வழி தொடங்குகின்ற மாணவச் செல்வங்களுக்கு, ம.இ.கா சார்பில் அதன் தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
இந்த மண்ணில் நம் சமுதாயத்திற்கு அரணாக விளங்கக்கூடிவை நம் தமிழ்ப் பள்ளிகள் தான்.
சமுதாயத்தின் பண்பாட்டு- பாரம்பரிய அடையாளமாக அவை விளங்குகின்றன;
எனவே தமிழ்ப் பள்ளிகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகின்ற பெற்றோருக்கும், அவர்களின் எதிர்காலத்திற்கு அடித்தளத்தை சிறப்பாக அமைக்கவிருக்கின்ற ஆசிரியர் பெருமக்களுக்கும், தமிழ்ப் பள்ளியே நமது தேர்வு என்பதை முன்னிறுத்தி பரப்புரை மேற்கொண்ட சமூக இயக்கங்களுக்கும் தமிழ்ப் பற்றாளர்களுக்கும் இந்த வேளையில் ம.இ.கா சார்பில் அவர் நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.
தமிழ்ப் பள்ளிகளுக்கு அன்று முதல் இன்று வரை காவலனாகவும் பாதுகாப்பு கேடயமாகவும் ம.இ.கா விளங்கி வருகிறது.
தமிழ்ப் பள்ளிகளுக்கான உரிமையுடன் மானியம் உள்ளிட்ட வசதிகளுக்கும் ம.இ.கா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.
நம் சமுதாயத்தைச் சேர்ந்த ஒவ்வொரு மாணவரையும் பட்டதாரியாக்கி அவர்களின் எதிர்காலம் சிறக்க, ம.இ.காவின் கல்விக் கரமான MIED-யும் என்றென்றும் தயாராக உள்ளது. அவ்வகையில் இடைநிலைப்பள்ளிகளுக்கு செல்கின்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களும் மிகுந்த தன்னம்பிக்கையுடன் கல்வியில் கவனம் செலுத்த விக்னேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
நம் சமுதாய எதிர்கால மீட்சிக்கு கல்வி ஒன்று தான் பற்றுக்கோடு;
அதனால் அனைத்து தரப்பு மாணவர்களும் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதில் தலைச் சிறந்து விளங்க வேண்டுமென விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.