
கோலாலம்பூர், மார்ச் 31 -பருவமழை மாற்றக் காலத்தில் பல பகுதிகளில் மழை பெய்தபோதிலும், தற்போதைய வெப்பமான வானிலை ஜூன் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மழை தற்காலிகமானது என்றும், இது வெப்பமான சூழல் முடிவுக்கு வந்ததற்கான அறிகுறி அல்ல என்று மலேசிய வானிலைத்துறையான மெட் மலேசியாவின் தலைமை இயக்குநர் முகமட் ஹிஷாம் முகமட் ஹனிப் ( Mohd Hisham Mohd Anip ) கூறினார்.
மார்ச் மாத நடுப்பகுதிக்கும் ஏப்ரல் மாதத்திற்கும் இடையில் வெப்பநிலை உச்சத்தை அடைய வாய்ப்புள்ளது என்றும், சில பகுதிகளில் கடும் வெப்ப அலை எட்டும்.
வடகிழக்குப் பருவமழையிலிருந்து தென்மேற்குப் பருவமழையின் ஆரம்பக்கட்டத்திற்கு மாறும் காலகட்டத்தில், 35 டிகிரி செல்சியஸிற்கும் அதிகமாக வெப்பநிலை நிலவுவது இயல்பானது.
வட தீபகற்பத்தில் மழை தொடங்கியிருந்தாலும், அது தற்காலிக நிவாரணத்தை மட்டுமே அளிக்கிறது என்று முகமட் ஹிஷாம் சுட்டிக்காட்டினார்.
35 டிகிரி செல்சியஸிற்னும் அதிகமான வெப்பநிலையைப் பதிவுசெய்த மாநிலங்களில் கெடா, பெர்லிஸ் , பேராக், கிளந்தான் மற்றும் தெரெங்கானுவின் சில பகுதிகளும் அடங்கும்.
வெப்பமான வானிலை பள்ளிகளையும் பாதித்துள்ளது. கெடாவில் உள்ள Kota Setar மற்றும் Pendang கில் 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 86,000 மாணவர்கள் மூன்று நாட்களுக்கு வீட்டிலிருந்தே கற்பித்தல் மற்றும் கற்றல் நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
கடும் வெப்பம் நீடித்தால், குறிப்பாக தண்ணீர் பற்றாக்குறை விவசாயம், வீட்டு உபயோகம் மற்றும் தொழில்துறையைப் பாதிக்கத் தொடங்கினால், மேக விதைப்பு மேற்கொள்ளப்படலாம்.
இருப்பினும், இதைத் தன்னிச்சையாக மேற்கொள்ள முடியாது என்றும், முறையான தொழில்நுட்ப மதிப்பீட்டிற்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் முகமட் ஹிஷாம் தெரிவித்தார்.



