Latestமலேசியா

தலைமறைவான முன்னாள் கணவருக்கு இன்னும் BUDI95 மானியமா? அமுலாக்கத்தில் முரண்பாடு என இந்திராவின் வழக்கறிஞர்கள் குற்றச்சாட்டு

கோலாலாம்பூர், மார்ச்-24-தலைமறைவான முன்னாள் கணவர் இன்னமும் BUDI95 எரிபொருள் மானியத்தைப் பெறுவதால், அரசாங்கத்தின் அமுலாக்க நடவடிக்கைகளில் முரண்பாடு நிலவுவதாக, மகளைக் காண போராட்டம் நடத்தி வரும் இந்திரா காந்தியின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்திராவின் மதம் மாறிய முன்னாள் கணவர் Riduan Abdullah எனப்படும் கே.பத்மநாதன், குறைந்தது கடந்தாண்டு நவம்பர் மாதத்திலிருந்து இந்த BUDI95 சலுகையை அனுபவித்து வருகிறார்.

மகள் பிரசன்னா டீக்‌ஷாவை, 2009-ஆம் ஆண்டில் கடத்திச் சென்று தலைமறைவானதிலிருந்து அவர் போலீஸால் தேடப்படும் நபராக உள்ள போதும், அரசாங்க உதவிகளை அவர் அனுபவித்து வருகிறார்.

ஆனால், இத்தனை ஆண்டுகளாகியும் அவர் இருக்கும் இடம் தெரியவில்லை என போலீஸ் கைவிரித்து வருகிறது.

என்றாலும், இன்று காலை 11.30 மணி வரைக்குமான நிலவரப்படி, இதே Riduan-னின் BUDI95 மானிய கணக்கு இன்னமும் செயல்பாட்டில் உள்ளது.

நிலைமை இப்படி இருக்க, அண்மையில் ஜோகூரில் RON95 பெட்ரோலை வரம்பு மீறி நிரப்பி வைரலான கார் உரிமையாளரின் MyKad முடக்கப்படுமென நிதியமைச்சு உடனடியாக அறிவித்துள்ளது.

எரிபொருள் மானிய அமுலாக்கத்தில் இப்படி ஒரு பக்கம் உடனடியாக நடவடிக்கை எடுப்பதும், மறுபக்கம் போலீஸாரால் தேடப்படும் நபர் அதே எரிபொருள் மானியத்தை ‘சுகபோகமாக’ அனுபவிப்பதை கண்டும் காணாமல் இருப்பதும் வியப்பையும், உள்ளபடியே பெருத்த ஏமாற்றத்தையும் அளிப்பதாக, இந்திராவின் வழக்கறிஞர்களான ராஜேஸ் நாகராஜன் மற்றும் Sachpreetraj Singh அறிக்கையொன்றில் கூறினர்.

இந்த ஒப்பீட்டை தவிர்க்க இயலாது எனக் குறிப்பிட்ட அவர்கள், இது சட்ட அமுலாக்கத்தில் காணப்படும் முரண்பாடுகளை வெளிப்படுத்துவதாக சாடினர்.

BUDI95 எரிபொருள் மானியத் திட்டத்தில் இருக்கும் சுயவிவரங்களை வைத்தாவது Riduan இருக்குமிடத்தை கண்டுபிடித்து, அவரிடமிருக்கும் மகள் பிரசன்னாவை தம்மிடம் ஒப்படைக்குமாறு இந்திரா ஏற்கனவே கோரியது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!