
பெய்ஜிங், ஏப்ரல்-14, பரஸ்பர வரி என்ற பெயரில் உலக நாடுகளுக்கு விதித்துள்ள கூடுதல் வரியை அமெரிக்கா மீட்டுக் கொள்ள வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
“தவற்றை சரி செய்ய அதுவே சரியான வழி. கூடுதல் வரியை அகற்றிவிட்டு பரஸ்பர மரியாதையின் சரியான பாதைக்குத் திரும்புங்கள்” என சீன வாணிப அமைச்சின் பேச்சாளர் கூறினார்.
விவேகக் கைப்பேசிகள் உள்ளிட்ட பயனர்களின் மின்னியல் சாதனங்களுக்கும் முக்கிய கணினி சில்லுகளுக்கும் பரஸ்பர வரியிலிருந்து விலக்களிப்பதாக அமெரிக்கா அறிவித்த மறுநாளன்று, சீனா அவ்வாறு கூறியுள்ளது.
இந்த வரி விலக்கானது மிக மிகச் சிறிய நடவடிக்கையே; அதன் தாக்கத்தை தாங்கள் மதிப்பீடு செய்து வருவகிறோம் என பெய்ஜிங் கூறியது.
அந்த வரி விலக்கானது, Nvidia, Dell, Apple போன்ற அமெரிக்கத் தொழில்நுட்ப பெரு நிறுவனங்களுக்குச் சாதகமான நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 2 வாரங்களாக அமெரிக்காவும் சீனாவும் மாறி மாறி வரி விதித்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா 145% வரியும் அமெரிக்கப் பொருட்களுக்கு சீனா 125% வரியும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.