தானா மேரா, டிசம்பர்-23 – கிளந்தான், தானா மேராவில் சுரங்க நிறுவனமொன்றின் இரவு விருந்து நிகழ்வில் அரைகுறை ஆடையுடன் பெண்ணின் கவர்ச்சி நடனம் இடம் பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பில், விசாரணை அறிக்கைத் திறக்கப்பட்டுள்ளது.
அந்நிகழ்வு சீனப் பள்ளியின் மண்டபத்தில் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், அதன் நிர்வாகமும் விசாரிக்கப்படுகிறது.
வீடமைப்பு-ஊராட்சி மன்றம், சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழல் துறைகளுக்கான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஹில்மி அப்துல்லா (Hilmi Abdullah) அதனை உறுதிபடுத்தினார்.
தானா மேரா மாவட்ட மன்றத்திடம் விசாரித்ததில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெர்மிட்டுக்கு விண்ணப்பிக்கவில்லை என தெரிய வந்துள்ளதாக அவர் சொன்னார்.
அவ்விருந்து நிகழ்வில் பங்கேற்ற பெரும்பாலோர், தானா மேரா சுற்று வட்டாரத்தில் சுரங்கத் தொழில் செய்யும் சீன நாட்டு பிரஜைகளும், தொழிலாளர்களும், வெளிநாட்டு விருந்தினர்களும் ஆவர்.
வந்திருந்த சிலரில் உள்ளூரைச் சேர்ந்த முஸ்லீம்களும் அடங்குவர்.
இந்நிலையில் உள்ளூர் கலாச்சாரத்துக்கு ஒவ்வாத அது போன்ற நடனங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது வருத்தமளிக்கிறது; அதுவும் பள்ளி மண்டபத்தில் அதனை நடத்தியிருப்பது ஏமாற்றமளிப்பதாக ஹில்மி சொன்னார்.
அது, 1998-ஆம் ஆண்டு பொழுதுபோக்கு மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் கட்டுப்பாட்டு தொடர்பான மாநிலச் சட்டத்தை மீறியச் செயலாகும்;
குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏற்பாட்டாளருக்கும் சீனப் பள்ளிக்கும் அதிகபட்சமாக 20,000 ரிங்கிட் அபராதமும் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம் என்றார் அவர்.