ராந்தாவ் பாஞ்சாங், அக்டோபர் -8 – தாய்லாந்தில் கொரியர் பிளாஸ்டிக் பைகளைக் கொண்டு பொட்டலமிட்டு இந்நாட்டுக்குள் கஞ்சா இலைகளைக் கடத்தி வந்த கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவும் அம்முயற்சியை, கிளந்தான் ரந்தாவ் பாஞ்சாங்கில் பொது நடவடிக்கைக் குழு (PGA) தவிடுபொடியாக்கியது.
Jeram Perdah-வில் சந்தேகத்திற்குரிய வகையில் காணப்பட்ட 22 வயது இளைஞனிடம் சோதனை நடத்தியதில், அவனது முதுகுப்பையில் கொரியர் போர்வையில் 13.4 கிலோ கிராம் எடையிலான மடக்கப்பட்ட கஞ்சா இலைகள் கண்டெடுக்கப்பட்டன.
அவற்றின் மொத்த மதிப்பு 41,664 ரிங்கிட் எனக் கூறப்படுகிறது.
அவன் போதைப்பொருள் உட்கொண்டதும் சிறுநீர் பரிசோதனையில் உறுதியானது.
தாய்லாந்திலிருந்து கஞ்சா இலைகளைக் கடத்தி வரும் runner-ராக செயல்பட்டு வரும் அவ்வாடவன், தான் கடத்திகொண்டு வரும் ஒவ்வொரு 10 கிலோ கஞ்சா இலைகளுக்கும் 250 ரிங்கிட்டை கமிஷனாகப் பெற்று வந்துள்ளான்.
அவன் கடத்திகொண்டு வரும் கஞ்சா பொட்டலங்கள் இடைத்தரகர்களின் கைகளுக்கு மாறி, பின்னர் அக்கும்பல் நிர்ணயித்த இடங்களுக்கு கொரியர் மூலமாக அனுப்பப்படுவது விசாரணையில் கண்டறியப்பட்டது.
1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.