
பேங்கோக், ஜூலை-24- தாய்லாந்து-கம்போடிய எல்லையில் இன்று மீண்டும் வெடித்துள்ள நெருக்கடியில் தாய்லாந்து பொது மக்களில் 11 பேர் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களில் பெரும்பாலோர் எரிவாயு நிலையமருகே நடத்த தாக்குதலில் உயிரிழந்தனர். 8 வயது சிறுவனும், கொல்லப்பட்டவர்களில் அடங்குவான். தாய்லாந்து பிரதமர் துறை அலுவலகம் அதனை உறுதிப்படுத்தியது.
அதே சமயம், தாய்லாந்து இராணுவத்தைச் சேர்ந்த 5 வீரர்கள் கம்போடியா வைத்த கண்ணிவெடியில் சிக்கி காயமடைந்துள்ளதாக Bangkok Post நாளிதழ் கூறியது; அவர்களில் ஒருவர் தனது வலது காலையே இழந்துள்ளார்.
முன்னதாக, கண்காணிப்பு ட்ரோன்களையும் கனரக ஆயுதமேந்திய படைகளையும் எல்லைக்கு அனுப்பிய கம்போடியா, துப்பாக்கிச் சூட்டையும் கிளப்பியதாக தாய்லாந்து குற்றம் சாட்டியது.
இதையடுத்து பதிலடியாக, கம்போடியாவின் இரு இராணுவத் தளங்களைக் குறி வைத்து ஆறு F-16 போர் விமானங்கள் மூலம் தாய்லாந்து ஆகாயத் தாக்குதல்களை நடத்தியது.
சண்டையைத் தொடக்கியதாக இரு நாடுகளும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றன.
இவ்வேளையில், கம்போடியாவிலிருந்து தனது தூதரை திரும்ப அழைத்துக் கொண்ட தாய்லாந்து அரசு, பேங்கோக்கில் உள்ள கம்போடியத் தூதரை வெளியேற்றியுள்ளது.
இருவழி அரச தந்திர உறவுகளும் ஆகக்கீழான மட்டத்திற்குக் குறைக்கப்பட்டுள்ளன.
பல ஆண்டுகளாகவே இரு நாடுகளுக்கும் எல்லை நெருக்கடி நிலவும் நிலையில், கடந்த மே மாதம் அது மீண்டும் மோசமானது. எல்லைச் சாவடிகள் மூடப்பட்டதோடு, இறக்குமதிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.