
பேங்கோக், ஜூலை-26- கம்போடியாவுடனான எல்லைச் சண்டையை நிறுத்துவதில் எந்தப் பிரச்னையும் இல்லையென தாய்லாந்து அறிவித்துள்ளது.
ஆனால், போர்நிறுத்த விதிகளில் மேலும் தெளிவும் வேண்டுமென, அதன் இடைக்கால பிரதமர் Phumtham Wechayachai கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான மோதலில் மத்தியஸ்தம் செய்ய, ஆசியான் தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் முன்வந்துள்ளார்.
அதனைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாகக் கூறிய Phumtham, கம்போடியா தொடர்ந்து தாக்குதல் நடத்தாது என்பதற்கான உத்தரவாதம் வேண்டும் என வலியுறுத்தினார்.
அதன் பிறகே அடுத்தக் கட்ட நகர்வு குறித்து முடிவெடுப்போம்; அதுவரை தாய்லாந்து இராணுவம் எந்தச் சாத்தியத்தையும் எதிர்கொள்ள முழு விழிப்பு நிலையில் இருக்குமென அவர் சொன்னார்.
முன்னதாக இரு நாட்டுத் தலைவர்களுடன் பேசிய அன்வார், சண்டையை நிறுத்த அவர்கள் ஒப்புக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.
அன்வாரின் மத்தியஸ்த முயற்சிக்கு கம்போடிய பிரதமர் Hun Manet இணக்கம் தெரிவித்தாலும், மூன்றாம் நாட்டின் தலையீட்டை ஏற்க மாட்டோம் என தாய்லாந்து பிடிவாதம் காட்டுவதாக முன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
இரு வழி பேச்சுவார்த்தைகள் மட்டுமே எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு என தாய்லாந்து வெளியுறவு அமைச்சு கூறியிருந்தது.
இவ்வாரம் வெடித்த தாய்லாந்து – கம்போடிய எல்லைச் சண்டையில் பொது மக்கள் உட்பட இதுவரை குறைந்தது 16 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.