
புத்ராஜெயா, டிசம்பர்-28 – 3 வாரங்களாக நீடித்து, பல உயிரிழப்புகள் ஏற்படவும் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரவும் காரணமான தாய்லாந்து-கம்போடிய எல்லை தகராறு முடிவுக்கு வந்துள்ளது.
அமைதிப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு நேற்று மதியம் 12 மணிக்கு அங்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது.
2025 ஆசியான் தலைவர் என்ற முறையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்த நடவடிக்கையை வரவேற்று, பொது மக்களின் பாதுகாப்பும், வட்டார அமைதியும் முக்கியம் என வலியுறுத்தினார்.
ஜனவரி 1-ஆம் தேதி மலேசியா ஆசியான் தலைமைப் பொறுப்பை பிலிப்பின்ஸிடம் ஒப்படைத்தாலும், அமைதி முயற்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாக அன்வார் சொன்னார்.
இதனால் தென்கிழக்காசியாவின் நிலைத்தன்மை மற்றும் ஆசியானின் நம்பகத்தன்மை மேலும் வலுப்பெறும் என்றார் அவர்.
ஆசியான் கண்காணிப்புக் குழு தாய்லாந்து – கம்போடியா இடையிலான இந்த அமைதி உடன்பாட்டை உறுதிப்படுத்தும்.
அதே சமயம் போர் நிறுத்தம் கடைப்பிடிக்கப்படுவதை உறுதிச் செய்ய, இரு நாடுகளும் நேரடி தொடர்பில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



