
ஈப்போ, ஏப்ரல்-4-இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டில் திடீர் தேர்தல் நடைபெறும் என்ற வதந்திகளை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மறுத்துள்ளார்.
16-ஆவது பொதுத்தேர்தல் முன்கூட்டியே அடுத்த ஓரிரு மாதங்களில் நடைபெறப் போவதில்லை என்றார் அவர்.
தற்போதையச் சூழலில் அரசியல் மோதல்களுக்கு நேரமோ அவசியமோ இல்லை என்றும் அவர் வலியுறுத்தினார்.
உயரும் வாழ்க்கைச் செலவு மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களைச் சமாளிக்க அரசாங்கமும் எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என, ஈப்போவில் மடானி நிகழ்ச்சியில் பேசியபோது அவர் அழைப்பு விடுத்தார்.
தொடர்ந்து அரசியல் விவாதங்களில் ஈடுபடுவது மக்களுக்கு உதவாது என்றும், நாட்டின் நிலைத்தன்மை மற்றும் மக்கள் நலனே முக்கியம் என்றும் அன்வார் கூறினார்.
தற்போது அரசாங்கத்தின் கவனம் ஆட்சி மற்றும் வளர்ச்சியில்தான் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
அடுத்த பொதுத் தேர்தல் நடைபெற 2027-ஆம் ஆண்டு கடைசி வரை கால அவகாசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.



