
உத்தர பிரதேசம், ஏப்ரல்-12- இந்தியா, உத்தர பிரதேசத்தில் திருமணத்திற்கு 10 நாட்கள் இருக்கும் போது வருங்கால மாமியாருடன் மருமகன் வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷிவானி என்ற பெண்ணுடன் ஏப்ரல் 16-ல் திருமணம் நடக்கவிருந்த நிலையில், 25 வயது ராகுல், ஏப்ரல் 6-ஆம் தேதி மர்மமான முறையில் காணாமல் போனார்.
ஷிவானியின் தாயாரான 38 வயது அனிதாவையும் காணவில்லை.
போலீஸில் புகாரளித்து விட்டு இரு வீட்டாருமே காணாமல் போனவர்களைத் தேடி அலைந்தனர்.
அப்போது தான், தாங்கள் ஏற்கனவே கண்ணுற்ற சில சந்தேகத்திற்குரிய சம்பவங்கள் அவர்களுக்கு நினைவுக்கு வந்தன.
வருங்கால மாமியாரின் வீட்டுக்கு அடிக்கடி வந்து மணிக்கணக்கில் ராகுல் பேசியிருக்கிறார்.
6 மாதங்களுக்கு முன் வருங்கால மருமகனுக்கு அனிதா விலையுயர்ந்த கைப்பேசியைப் பரிசளித்துள்ளார்.
அங்குதான் இருவருக்கும் இந்தக் ‘கள்ளக் காதல்’ மலர்ந்துள்ளது.
மருமகனுடன் ஓடிய மாமியார் வெறுங்கையோடு போகவில்லை; மகளுக்கு சீதனமாக கொடுக்க வைத்திருந்த நகைகள் மற்றும் 350,000 ரூபாய் பணத்துடன் கம்பி நீட்டினார்.
இருவரும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் நடவடிக்கை எடுப்பது கடினமே என போலீஸ் கூறியது.
இருந்தாலும் நகைள் மற்றும் பணத்தைத் திருடியதாக அனிதா மீது அவரின் குடும்பம் புகார் செய்துள்ளது.
இதையடுத்து திருட்டு புகாரில் அனிதா தேடப்படுகிறார்