தீபாவளி விடுமுறையை முன்னிட்டு ‘Op Lancar’ சாலைப் பாதுகாப்பு நடவடிக்கை – போலீஸ் அறிவிப்பு

கோலாலம்பூர், அக்டோபர் 9-
வரவிருக்கும் தீபாவளி விடுமுறையை முன்னிட்டு நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து வாகனமோட்டம் சீராக நடைபெறுவதற்காக, போலீஸ் துறை அக்டோபர் 17 முதல் 21 வரை ‘Op லஞ்சார் எனப்படும் சிறப்பு சாலைப் பாதுகாப்பு நடவடிக்கையைத் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.
தீபாவளி காலத்தில் சுமார் 21 இலட்சம் வாகனங்கள் நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், 500 போலீஸ் பணியாளர்கள் நாடு முழுவதும் பணியில் ஈடுபடுவார்கள் என புக்கிட் அமான் போக்குவரத்து அமலாக்க மற்றும் விசாரணைத் துறையின் இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசான் பஸ்ரி தெரிவித்தார்.
முக்கிய நெடுஞ்சாலைகள், நகரப்பாதைகள் போன்ற பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் பணிகளில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்றும் வாகனக் கோளாறுகள் அல்லது நெரிசல் ஏற்பட்டால் உடனடி உதவி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்தில் அரசு இரண்டு நாட்கள் கூடுதல் பள்ளி விடுமுறைகளை அறிவித்திருப்பதை முன்னிட்டு மக்கள் நீண்ட விடுமுறையைப் பயன்படுத்தி ஊருக்கு அல்லது சுற்றுலா பகுதிகளுக்கு பயணம் செய்வர் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதே நேரத்தில், பெரிய சரக்கு வாகனங்களின் இயக்கத்துக்கு தொடர்பான தடை குறித்து கேட்கப்பட்டபோது, யூஸ்ரி, போக்குவரத்து அமைச்சின் உத்தரவுக்காக காத்திருக்கிறோம் எனத் தெரிவித்தார்.
மொத்தத்தில், தீபாவளி கொண்டாட்டத்துடன் தொடங்கும் நீண்ட விடுமுறையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்த்து சாலைகளில் பாதுகாப்பான இயக்கத்தை உறுதி செய்வதே இந்த ஒப் லான்சார் நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்