
கோலாலம்பூர், ஜூலை-24- குடியிருப்பொன்றில் பொருத்தப்பட்டிருந்த தீயணைப்புக்கான தண்ணீர் குழாயைச் சேதப்படுத்தி அதன் தலைப்பகுதியை எடுத்துச் சென்ற பெண்ணின் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
அது தங்கள் கவனத்திற்கு வந்திருப்பதை உறுதிப்படுத்திய மலேசியத் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு, அப்பெண்ணின் செயல் குறித்து வருத்தமும் ஏமாற்றமும் தெரிவித்தது.
தீயணைப்பு போன்ற ஆபத்து அவசர நேர பயன்பாட்டுக்காக அந்த தண்ணீர் குழாய்கள் பொருத்தப்பட்டுள்ளன; அதைக் கூட விட்டு வைக்காமல் இப்படி எடுத்துச் செல்வது கொஞ்சமும் பொறுப்பற்றச் செயலாகும்.
கட்டட உரிமையாளர்களின் அனுமதியின்றி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என, அத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ நோர் ஹிஷாம் மொஹமட் (Datuk Nor Hisham Mohammad) கூறினார்.
அவசரப் பயன்பாட்டுக்கான உபகரணங்களை உரிய நோக்கமின்றி தவறாகப் பயன்படுத்த வேண்டாமென, அவர் பொதுமக்களை அறிவிறுத்தினார்.
குடியிருப்பொன்றின் தீயணைப்புக்கான தண்ணீர் குழாயைப் பெண்ணொருவர் திறந்து, அதன் தலைப்பகுதியை எடுத்துச் செல்லும் வீடியோ முன்னதாக வைரலாகி, வலைத்தளவாசிகளின் கவனத்தைப் பெற்றது.