
கோலாலம்பூர், மே 8 – பிகேஆர் கட்சித் தேர்தலில் துணைத் தலைவர் பதவிக்கு நூருல் இஷா அன்வார் ( Nurul Izzah Anwar ) போட்டியிடுவதால் வேண்டிய குடும்ப உறுப்பினருக்கு சலுகை காட்டப்படுவது என்ற பிரச்னை இருக்காது. கட்சியின் உதவித் தலைவராக இருக்கும் நூருல் இஷா , கட்சியில் இரண்டாவது இடத்தைப் பிடிக்க நியமிக்கப்படவில்லை என பி.கே.ஆர் தகவல் பிரிவு துணைத் தலைவரான டத்தோஸ்ரீ R. ரமணன் கூறினார்.
சில நாட்களுக்கு முன்பிருந்தே , பல அடிமட்ட தொண்டர்களும் கட்சித் தலைவர்களும் முன்னாள் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினருமான நுருல் இஷாவை பிகேஆர் துணைத் தலைவராகப் போட்டியிட வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
பி.கே.ஆரின் 222 டிவிசன்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான டிவிசன்கள் நுருல் இஷாவை துணத்தலைவர் பதவிக்குப் போட்டியிட பரிந்துரைத்துள்ளது. இது கட்சிக்குள் உள்ள ஜனநாயக சூழலைக் காட்டுகிறது.
Nepotisme என்றால் என்ன ? தனது தந்தை அன்வார், நுருல் இஷாவை துணைத்தலைவர் பதவிக்கு நியமித்தால்தான் வேண்டியவர் அல்லது குடும்ப உறுப்பினருக்கு சலுகை காட்டுவதாக அர்த்தமாகும். ஆனால் பி.கே.ஆர்.கட்சியின் 30,000 த்திற்கும் மேற்பட்ட அடிமட்ட உறுப்பினர்கள் தேர்வு செய்யக்கூடிய உயர்மட்ட பதவிகளுக்கான தேர்தலாக இது இருப்பதால் இங்கு குடும்ப உறுப்பினருக்கு அல்லது வேண்டியவருக்கு சலுகை காட்டப்படுகிறது என்ற பிரச்னை எழவில்லை.
இது ஒரு ஆரோக்கியமான கட்சித் தேர்தல், அடித்தள மக்களின் குரல் தேர்வு செய்யட்டும் என்று கோலாலம்பூரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசியபோது ரமணன் தெரிவித்தார். இதனிடையே எதிர்வரும் பி.கே.ஆர் கட்சித் தேர்தலில் தாம் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதையும் தொழில் முனைவர் மேம்பாடு மற்றும் கூட்டுறவு துணையமைச்சருமான ரமணன் உறுதிப்படுத்தினார்