தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி பன்னீர் செல்வத்தின் வழக்கறிஞர் மனு தாக்கல்

சிங்கப்பூர், அக்டோபர்-6,
போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக மலேசியரான பி. பன்னீர் செல்வம் சிங்கப்பூரில் இன்னும் 48 மணி நேரங்களில் தூக்கிலிடப்படவிருக்கும் நிலையில், அதனை நிறுத்தி வைக்கக் கோரி அவரின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.
மரண தண்டனையிலிருந்து பன்னீரைக் காப்பாற்றும் கடைசி முயற்சியாக, அந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அம்மனுவை ஏற்றுக் கொண்டு, தண்டனை நிறைவேற்றத்திற்கு தடையுத்தரவுக் கிடைக்குமென அவர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இதற்கிடையில், பன்னீரின் தூக்குத் தண்டனையை நிறுத்தக் கோரி கோலாலம்பூரில் தற்போது ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று வருகிறது.
அதில் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொது அமைப்பினரும் கலந்துகொண்டுள்ளனர்.
51.84 கிராம் போதைப்பொருள் கடத்தியதாக 2017-ஆம் ஆண்டு சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் பன்னீர் மரணதண்டனை விதிக்கப்பட்டார்.
அவரது மேல்முறையீடுகளும் பொது மன்னிப்புக் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டு விட்டன.
இந்நிலையில், வரும் புதன்கிழமை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுமென பன்னீரின் குடும்பத்தாருக்கு சிறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.