
வாஷிங்டன், மே-26 – தென்கிழக்காசியாவிலேயே மலேசியர்கள் தான் மளிகைப் பொருட்களுக்கு அதிகமாகச் செலவிடுவது ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
2023-ஆம் ஆண்டில் மலேசியாவின் வீட்டு உணவுக்கான பயனீட்டுச் செலவு இவ்வட்டாரத்திலேயே மிக அதிகமாக இருந்துள்ளது.
அதாவது ஒரு நபருக்கு ஆண்டுக்கு 1,940 டாலராக அது இருந்ததாக USDA எனப்படும் அமெரிக்க விவசாயத் துறையின் பொருளாதார ஆராய்ச்சி சேவையின் தரவு காட்டுகிறது.
2023-ஆம் ஆண்டில் பேங்க் நெகாரா மலேசியாவின் நாணய மாற்று விகிதத்தின்படி, அந்த 1,940 டாலர் என்பது 8,848 ரிங்கிட்டுக்குச் சமமாகும்.
இருப்பினும், தற்போதைய மாற்று விகிதங்களில், இது 8,286 ரிங்கிட்டுக்குச் சமமாகும்.
இந்த USDA புள்ளிவிவரங்கள் பணவீக்கம் அல்லது நாடுகளுக்கு இடையிலான வாழ்க்கைச் செலவுகளில் உள்ள வேறுபாடுகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.
மலேசியர்களுக்கு அடுத்து சிங்கப்பூர் 1,831 டாலருடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.
1,108 டாலருடன் தாய்லாந்து மூன்றாவது இடத்திலும் 1,070 டாலருடன் பிலிப்பைன்ஸ் நான்காவது இடத்திலும் உள்ளன.
கம்போடியா 898 டாலருடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
இவ்வட்டார நாடுகளுடன் ஒப்பிடும்போது மலேசியர்கள் வீட்டில் உணவுக்காக அதிக அளவு செலவிடுவதற்கு பல காரணங்கள் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
உணவு இறக்குமதியை நம்பியிருத்தல், ரிங்கிட் நாணய மதிப்பிழப்பு மற்றும் தொழிலாளர் பற்றாக்குறை ஆகியவை இதில் அடங்கும்.
உரம் மற்றும் கால்நடை தீவனம் போன்ற உணவு உற்பத்தியில் அதிகரித்து வரும் செலவுகள், உணவு உற்பத்தியில் ஏகாபத்தியம் மற்றும் குறைந்த பண்ணை உற்பத்தித்திறன் ஆகியவை பிற காரணங்களாகும்.