தெரு நாய்களைக் கொடூரமாக கொன்றோமா? குளுவாங் நகராண்மைக் கழகம் மறுப்பு

குளுவாங், பிப்ரவரி-9,
தெருவில் சுற்றித் திரிந்த நாய்களை கொடூரமாக நடத்தியதாகக் கூறப்படுவதை, ஜோகூர், குளுவாங் நகராண்மைக் கழகம் MPK திட்டவட்டமாக மறுத்துள்ளது.
தங்கள் மீதான அக்குற்றச்சாட்டு அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளதை அறிவோம் என, நகராண்மைக் கழகத் தலைவர் Mohd Fahmy Yahya கூறினார்.
ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தெரு நாய்கள் பிடிக்கப்படுவதும் கொல்லப்படுவதும், நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளின் படியே மேற்கொள்ளப்படுகின்றன.
கால்நடை சேவைத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால், Put To Sleep முறையில் தெரு நாய்கள் கொல்லப்படுகின்றன.
அதற்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளும் அத்துறையின் அனுமதியைப் பெற்றவை.
ஆக, நாய்களைக் கொடூரமாகக் கொன்றதாகக் கூறுவதில் உண்மையில்லை என Fahmy விளக்கினார்.
நகராண்மைக் கழகத்தின் நற்பெயரைப் பாதித்திருப்பதால், அவ்வீடியோவைப் பதிவேற்றிய சமூக ஊடக கணக்குக்கு எதிராக போலீஸில் புகார் செய்திருப்பதாகவும் அவர் சொன்னார்.