கோலாலம்பூர், டிசம்பர்-9 – தென் கொரியாவுக்கான பிரதமரின் அண்மைய அலுவல் பயணத்தின் வாயிலாக, மொத்தம் 32.8 பில்லியன் ரிங்கிட் முதலீட்டு வாய்ப்புகளை மலேசியா ஈர்த்துள்ளது.
மின்சார வாகனங்கள் உள்ளிட்ட மோட்டார் வாகனத் துறை, மின்சார வாகனங்களுக்கான உலோகப் பயன்பாடு, இரசாயனம், biofarmaseutikal எனப்படும் உயிரி மருந்தியல், பசுமைத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கொரியாவின் பெருநிறுவனங்கள் அந்த முதலீடுகளைச் செய்கின்றன.
மூன்றாண்டு காலத்தில் படிப்படியாக அம்முதலீடுகள் மலேசியா வருமென, மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போது, முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை அமைச்சு கூறியது.
அது தவிர்த்து, 1.3 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ஏற்றுமதி வாய்ப்பையும், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மலேசியப் பேராளர் குழு பெற்று வந்துள்ளது.
தென் கொரியாவுக்கு செம்பனை எண்ணெய், உயிரி எரிபொருள், உணவுப் பொருட்கள், கையுறைகள் போன்ற francais தொழில்துறை பயன்பாட்டுக்கான பொருட்களின் ஏற்றுமதியை அது உட்படுத்தியுள்ளது.
பெருமைப்படத்தக்க இந்த முதலீட்டு மற்றும் வர்த்தக வாய்ப்புகள் மூலம், மலேசியப் பொருளாதாரம் மீது கொரிய முதலீட்டாளர்களும் இறக்குமதியாளர்களும் வைத்துள்ள நம்பிக்கை மீண்டும் புலப்பட்டுள்ளது.
கொரியாவின் நம்பகமான வர்த்தகப் பங்காளியாகவும், முதலீட்டுக்கானத் தேர்வாகவும் மலேசியா தொடர்ந்து விளங்கி வருவதாக, அமைச்சு குறிப்பிட்டது.