
கோலாலம்பூர், ஜூலை-19- வசதியில்லாதவர்களுக்கு சிறுநீரக சிகிச்சையில் முன்னிற்கும்
Maaedicare Charitable Foundation அறக்கட்டளை, நன்கொடைத் திரட்டும் நோக்கில் நேற்றிரவு இரண்டாம் ஆண்டாக Gala விருந்தை நடத்தியது.
Maaedicare Charitable Foundation புரவலரான நெகிரி செம்பிலான் மாநில சமஸ்தானாதிபதி துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிர் இந்த Gala விருந்தை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
அரச குடும்பத்தினர், சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ Dr. Dzulkefly Ahmad உள்ளிட்டோரும் அதில் கலந்துகொண்டனர்.
பிரமுகர்களும், தொழிலதிபர்களும், நன்கொடையாளர்களும் பங்கேற்ற இந்நிகழ்வில், ரொக்கம் மற்றும் இதர நன்கொடை வடிவில் 600,000 ரிங்கிட் திரண்டது.
அது குறித்து மகிழ்ச்சித் தெரிவித்த அறக்கட்டளையின் தலைவர் Tunku Dato Yaacob Khyra, மலேசியாவில் வளர்ந்து வரும் சிறுநீரக நோய் நெருக்கடியை நிவர்த்தி செய்வதற்கும், நாடு தழுவிய இதய சுகாதார முயற்சிகளை விரிவுபடுத்தும் பணிகளுக்கும் இந்நிதி பெரிதும் உதவும் என நம்பிக்கைத் தெரிவித்தார்.
குறிப்பாக டயாலிசிஸ் மையங்களில் சிறுநீரக பராமரிப்பை மேம்படுத்தவும், இதய நோயறிதல் மையத்தில் நோயறிதல் திறன்களை வலுப்படுத்தவும் மற்றும் பின்தங்கிய சமூகங்களுக்கு சேவை செய்யும் இரண்டு Klinik Amal Percuma கிளினிக்குகளில் இலவச சுகாதார பரிசோதனையை அதிகரிக்கவும் இந்நிதி உதவும்.
இவ்வேளையில், சிறப்பு ‘டயாலிசிஸ் தாதியர்கள்’ சான்றிதழ் திட்டத்தையும் அவர் முன்மொழிந்தார்.
டயாலிசிஸ் சிகிச்சைக்குத் தேவையான துல்லியமான திறன்களுடன் தாதியர்களை உருவாக்குவதற்காக வடிவமைக்கப்பட்ட 2-மாத பயிற்சி திட்டம் இதுவாகும் என்றார் அவர்.
1994-ஆம் ஆண்டிலிருந்து இதுவரை 32,000 சிறுநீரக நோயாளிகளுக்கு இந்த Maaedic Charitable அறக்கட்டளை கை கொடுத்துள்ளது.