
கோலாலம்பூர், செப்டம்பர் 3- தேசத்துரோக மற்றும் தவறாக வழிநடத்தும் பதிவுகளுக்காக இரண்டு டிக்டோக் பயனர்கள் மீது போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். முதலாம் படிவ மாணவி ஜாரா கைரினா மகாதீரின் ( Zara Qairina ) மரணம் குறித்த பதிவை மையமாக கொண்ட மற்றும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமை இஸ்ரேலுடன் தொடர்புபடுத்தும் இந்த விவகாரங்கள் சம்பவந்தப்பட்டுள்ளதாக புக்கிட் அமான் குற்றப்புலனாய்வுத்துறை இயக்குனர் எம். குமார் தெரிவித்தார்.
இரு கணக்கு வைத்திருப்பவர்களும் அடையாளம் காணப்பட்ட போதிலும் , அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்கள் அல்ல என்பதால் அந்த சந்தேக நபர்களைக் கண்டறியும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில் அவர் சுட்டிக்காட்டினார்.
தேசத்துரோகம், பொது அமைதியின்மையை ஏற்படுத்துதல் மற்றும் தவறான அல்லது புண்படுத்தும் உள்ளடக்கத்தைப் பரப்புவதற்கு சமூக வலைத்தளங்களை தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்ட குற்றப் பிரிவு விசாரணைகளை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேசத்துரோக, பொய்யான அல்லது பொது அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடிய பதிவுகளை உருவாக்குதல், பதிவேற்றுதல் அல்லது பரப்புதல் ஆகியவற்றிற்கு எதிராக எந்தவொரு இணக்கப் போக்கின்றி குற்றவாளிகள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்வார்கள் என்று குமார் எச்சரித்தார்.