
ஷா ஆலாம், மார்ச்-28-பள்ளிச் சீருடையில் மலேசியக் கொடியான ஜாலூர் ஜெமிலாங் சின்னத்தை அணிவதைக் கட்டாயமாக்கியுள்ள அரசாங்கத்தின் நடவடிக்கையை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்துப் பேசியுள்ளார்.
இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்க்க இது ஒரு சிறந்த வழியாகும்.
“பெரும்பாலான அண்டை நாடுகள் இதைச் செய்துள்ளன, எனவே நாம் ஏன் செய்யக்கூடாது?” என பிரதமர் கேள்வி எழுப்பினார்.
மாணவர்களுக்கு அச்சின்னங்களை வழங்குவதன் மூலம், பிறந்த நாட்டை நேசிக்க சிறு வயதிலேயே அவர்களுக்குக் கற்பிக்க முடியும்.
கல்வி அமைச்சின் பரிந்துரையை செயல்வடிவமாக்க அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளது; அதுவும் இலவசமாகவே அச்சின்னங்கள் வழங்கப்படுகின்றன.
எனவே இதை சர்ச்சையாக்க வேண்டிய அவசியம் இருப்பதாகத் தமக்குத் தெரியவில்லை என டத்தோ ஸ்ரீ அன்வார் கூறினார்.
கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் அனைத்துப் பள்ளிகளையும் சேர்ந்த மாணவர்கள், ஏப்ரல் 21 தொடங்கி பள்ளிச் சீருடையில் தேசியக் கொடியின் சின்னத்தை அணிவது கட்டாயமாகும்.
அதற்காக 2025/2026 பள்ளி தவணையில் ஒவ்வொரு மாணவருக்கும் 2 ஜாலூர் ஜெமிலாங் சின்னங்கள் இலவசமாக வழங்கப்படுமென கல்வி அமைச்சு நேற்று அறிவித்தது.
அனைத்து அரசுப் பள்ளிகள், அரசாங்க உதவிப் பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி கழகங்கள் ஆகியவற்றுக்கு இப்புதிய வழிகாட்டி பொருந்தும்.
மற்ற கல்வி நிறுவனங்களும் அதனை அமுல்படுத்த ஊக்குவிக்கப்படுவதாக அமைச்சு கூறியிருந்தது.