
கோலாலம்பூர், ஆகஸ்ட்-24 – தேசியக் கொடியை உட்படுத்திய சம்பவங்களை ஒரு சாக்காக வைத்து இனங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என, பிரதமர் மலேசியர்களை நினைவுப்படுத்தியுள்ளார்.
நாட்டின் மாண்பு மற்றும் இறையாண்மையின் சின்னமாக திகழும் Jalur Gemilang கொடியை அனைவரும் மதிக்க வேண்டும் என்பது உண்மைதான்;
அதில் தவறிழைப்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் நியாயமானதே;
ஆனால், அதையே ஒரு இனவிவகாரமாக்கி மோதல்களை உருவாக்க முயல்வது கூடாது என டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
பல்லின மக்கள் வாழும் நாட்டின் அமைதியும் சுபிட்சமும், எல்லை மீறிய நடவடிக்கைகளால் சீரழியக் கூடாது என அன்வார் நினைவுறுத்தினார்.
தேசியக் கொடி தலைக்கீழாகப் பறக்க விடப்பட்ட சில சம்பவங்கள் தொடர்பில், அம்னோ இளைஞர் பிரிவு உள்ளிட்ட தரப்புகள் எதிர்வினையாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ஒரு சீனக் கடைக்காரரை உட்படுத்திய தவறு தொடர்பில், அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் Dr Akmal Salleh, தனது பரிவாரங்களுடன் பினாங்கு வரை சென்று போராட்டம் நடத்தினார்.
அதோடு எல்லை மீறிய கருத்துகளை வெளியிட்டு பொது அமைதியைக் கெடுத்ததாக, வெள்ளிக்கிழமை அவர் நீதிமன்றத்திலும் நிறுத்தப்பட்டார்.