
புத்ராஜெயா, பிப்ரவரி-13 – தொழில் துறை நீதிமன்ற முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி கருப்பையா, தேசிய ஊதிய பேச்சுவார்த்தை மன்றமான MPGN-பின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரின் பதவி நியமனம் பிப்ரவரி 1 முதல் 2026 செப்டம்பர் 30 வரை நடப்பில் இருக்குமென மனித வள அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியது.
ராஜேஸ்வரி தொழில் துறை சட்டம், வேலை வாய்ப்புச் சட்டம், பெருநிறுவனச் சட்டம் ஆகியவற்றில் 32 ஆண்டுகளுக்கும் மேலான நிபுணத்துவம் பெற்றவர்.
பணிநீக்கம், மறுசீரமைப்பு, ஆட்குறைப்பு மற்றும் கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகள் தொடர்பான 500 க்கும் மேற்பட்ட வழக்குகளை அவர் தீர்த்து வைத்துள்ளார்.
வாஷிங்டன் டி.சி.யில் உலக வங்கியுடன் சட்ட ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளதோடு, மலேசியாவில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியக் கொள்கையை அறிமுகப்படுத்துவது உட்பட தொழிலாளர் கொள்கைகளை மேம்படுத்துவதிளும் அவர் ஈடுபட்டுள்ளார்.
அதோடு, தொழில் துறை உறவுகள், கொள்கை உருவாக்கம், பெருநிறுவன நிர்வாகம் ஆகியவற்றில் அவர் பரந்த நிபுணத்துவம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி நோக்கங்களுக்கு ஏற்ப வலுவான சட்ட திசைகள், கொள்கை புதுமை, தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகளின் நலன்களுக்கு இடையில் சமநிலையை உறுதி செய்தல் ஆகியவற்றில் ராஜேஸ்வரி ஒரு வியூக சொத்தாக விளங்குவார் என அமைச்சு நம்பிக்கைத் தெரிவித்தது.