
கோலாலம்பூர், ஜூலை-11 – 2025 தேசிய ஒருமைப்பாட்டு வாரத்தை ஒட்டி எதிர்வரும் ஜூலை 18, 19-ஆம் தேதிகளில் கோலாலாம்பூர் கோபுரம் நீல நிற வண்ண விளக்குகளால் ஜொலிக்கவிருக்கிறது.
மலேசிய மக்கள் மத்தியிலான நல்லிணக்கத்தையும் ஒற்றுமை உணர்வையும் பறைசாற்றும் வகையில் அந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் அதனைத் தெரிவித்தார்.
ஒருமைப்பாட்டு வாரத்தை விளம்பரப்படுத்துவதில் கோலாலாம்பூர் கோபுரமும் வியூக பங்காளியாக இணைந்திருப்பது குறித்து அவர் மகிழ்ச்சித் தெரிவித்தார்.
இவ்வேளையில் நாட்டு மக்கள் மத்தியில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை விதைக்கச் செய்யும் அமைச்சின் முயற்சியுடன் தாங்களும் கைக் கோர்ப்பது பெருமையளிப்பதாக, கோலாலம்பூர் கோபுரத்தின் நிர்வாகமான LSH Service Master-ரின் தலைமை செயலதிகாரி கைரில் ஃபைசால் ஒத்மான் கூறினார்.
கோலாலம்பூர் கோபுரத்தை நீல வண்ணத்தில் ஒளிரச் செய்வதன் மூலம், ஒற்றுமை என்பது மலேசியர்களின் கூட்டு பொறுப்பு என்ற செய்தியை மக்களுக்கு உணர்த்த தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்துள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
பன்முகத் தன்மைக் கொண்ட மலேசியக் கலாச்சாரத்தை கொண்டாடவும், மக்களிடையே நல்லிணக்கத்தைப் பேணவும் ஏதுவாக, ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சு வருடாந்திர நிகழ்வாக இந்த தேசிய ஒருமைப்பாட்டு வாரத்தை நடத்தி வருகிறது.
இவ்வாண்டு அக்கொண்டாட்டம் பினாங்கு, பத்து காவான் அரங்க வளாகத்தில், ஜூலை 17 முதல் 20 வரை நடைபெறுகிறது.