
ஈப்போ, ஏப்ரல்-10, பேராக்கில் உள்ள சீன ஆரம்பப் பள்ளியொன்றில் மாணவர்கள் தேசிய கீதமான நெகாராகூவை சீன மொழியில் பாடியதாக வதந்தி பரப்பியதற்காக, சமூக ஊடக அரசியல் பிரபலம் ஒருவர் கைதாகியுள்ளார்.
டிக் டோக்கில் “Ratu Naga” என்ற பெயரில் பெரிக்காத்தான் நேஷனலின் தீவிர ஆதரவாளராக வலம் வரும் ஷாருல் ஏமா ரெனா அபு சமா (Syarul Ema Rena Abu Samah) என்பவரே கைதான பெண்ணாவார்.
1998-ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடகச் சட்டத்தின் 233-ஆவது பிரிவின் கீழும் குற்றவியல் சட்டத்தின் கீழும் அவர் கைதானார்.
என்ற போதிலும் வைரலான வீடியோவில் அவர் பேசியதில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லையென, அவரின் வழக்கறிஞர் சை’ட் மாலேக் விளக்கினார்.
மேற்கண்ட 233-ஆவது பிரிவானது இணைய வசதிகளின் முறையற்ற பயன்பாட்டைக் கையாள்வதாகும்.
இதுவொரு தேவையற்ற கைது எனக் கூறிக் கொண்ட சை’ட் மாலேக், தனது கட்சிக்காரர் மீதான விசாரணையை போலீஸும் அரசாங்கமும் நிறுத்த வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
சீனப் பள்ளியில் தேசிய கீதத்தின் மாண்பை அவமதிக்கும் வகையில், சீன மொழியில் அது பாடப்பட்டதாகக் கூறியதை அடுத்து, “Ratu Naga” வைரலானார்.
அவர் மீது போலீஸ் புகாரும் செய்யப்பட்டன.
எனினும், வீடியோவில் தவறான கூற்றை வெளியிட்டதற்காக பின்னர் அவர் மன்னிப்புக் கேட்டார்.
கடந்தாண்டு தெலுக் இந்தானில் உள்ள சீனப் பள்ளியில் பதிவுச் செய்யப்பட்ட அவ்வீடியோவில் மாணவர்கள் பாடியது உண்மையில் தேசிய கீதம் அல்ல; மாறாக பேராக் மாநில கீதம் என பேராக் போலீஸ் தலைவர் முன்னதாக தெளிவுப்படுத்தியிருந்தார்.