
கோலாலம்பூர்- கூட்டணியிலிருந்து வெளியேறி எதிர்க்கட்சியில்
இணைவதற்கு மஇகாவின் அண்மைய தேசிய பேராளர் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, தேசிய முன்னணியை விட்டு வெளியேறும் ம.இ.காவின் நடவடிக்கைக்கு கூட்டணி தடையாக இருக்காது என்று தேசிய முன்னணியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி கோடிகாட்டியுள்ளார்.
ம.இ.காவின் தலைமைத்துவம் மற்றும் அதன் பேராளர்கள் எடுத்த முடிவை தாம் மதிப்பதாக அவர் தெரிவித்தார். அவர்கள் என்ன முடிவு செய்தாலும் நாங்கள் அதனை திறந்த மனதுடனும் , மனப்பான்மையுடனும் ஏற்றுக்கொள்வோம் என அம்னோவின் தலைவருமான ஸாஹிட் கூறினார்.
எந்தவொரு இறுதி முடிவு எடுப்பதற்கு முன் நாங்கள் ம.இ.காவுடன் பேச்சு நடத்துவோம் என தேசிய முன்னணியின் துணைத்தலைவர் முகமட் ஹசான் வெளியிட்டிருந்த அறிக்கை குறித்து வினவப்பட்டபோது , இதனை தாம் ஏற்றுக் கொள்வதோடு இதுவே சிறந்த அணுக்குமுறை என்றும் ஸாஹிட் வருணித்தார். எந்த முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பது முற்றிலும் ம.இ.காவைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.



