
கோலாலம்பூர், மார்ச்-21 – ஜாலான் மஸ்ஜித் இந்தியா, தேவி ஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரத்தில் மூக்கை நுழைத்து ‘சாம்பியனாக’ முயல வேண்டாமென, அனைவரையும் பிரதமர் நினைவுறுத்தியுள்ளார்.
அக்கோயிலின் இடமாற்றம் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்புகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன;
சுமூகமானத் தீர்வை எட்டுவதற்கு அவை முழு மூச்சில் ஈடுபட்டுள்ள நிலையில், அதனைக் கெடுக்கும் வகையில் சில வழக்கறிஞர்கள் செயல்படுவதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
சமயம் என்ற பெயரில் குட்டையைக் குழப்பக் கூடாது; இந்து சமய நடவடிக்கைகளில் கொஞ்சமும் சம்பந்தமே இல்லாத யார் யாரோ, அரசாங்கம் அக்கோயிலை உடைக்கப் போவதாக அறிக்கை விடுகின்றனர்.
அது அப்பட்டமான பொய்யாகும்.
இந்து ஆலயமோ அல்லது மற்ற சமயங்களின் வழிபாட்டுத் தலங்களோ உடைக்கப்படுவதை, ஒரு பிரதமராக தாம் வேடிக்கைப் பார்ப்பதை கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என டத்தோ ஸ்ரீ அன்வார் சொன்னார்.
அந்தக் கோயில் நிலம் அரசாங்கத்துடையது அல்ல; தனியார் நிலம்.
அங்கு மசூதியைக் கட்ட அவர்கள் முடிவுச் செய்துள்ளார்கள்.
கோயிலுக்கோ அங்கு சட்டப்பூர்வ உரிமையில்லை.
இருந்த போதிலும் நிலத்துக்குச் சொந்தக்காரரான தனியார் நிறுவனம் மத நல்லிணக்கம் கருதி சிறிய உதவியை வழங்க முன்வந்துள்ளது.
அதே சமயம் DBKL-லும் மாற்று நிலத்தை அடையாளம் கண்டு விட்டது.
மசூதி கட்டப்படுவதற்கு ஏதுவாக சுமூகமான முறையில் ஆலயம் இடமாற்றம் செய்யப்படுவதற்கு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது; அதற்கு நாம் வழி விட வேண்டும்.
அதை விடுத்து, முஸ்லீம்கள் உட்பட யாரும் விரும்பத்தகாத கருத்துகளை வெளியிட்டு அசாதாரணச் சூழ்நிலையை உருவாக்க வேண்டாம் என பிரதமர் கேட்டுக் கொண்டார்.
தனியார் நிலத்தில் அமைந்துள்ள கோயிலை, மத நல்லிணக்கத்தோடு பொருத்தமான இடத்திற்கு மாற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக DBKL நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.