தைப்பூசம் & சீனப் புத்தாண்டு; அத்தியாவசிய பொருட்கள் விலை இரட்டிப்பு; அநியாய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

ஜோர்ஜ்டவுன், ஜனவரி-27 – தைப்பூசம் மற்றும் சீனப் புத்தாண்டை முன்னிட்டு பினாங்கில் அத்தியாவசிய காய்கறிகள் மற்றும் பழங்களின் விலை திடீரென உயர்ந்துள்ளதாக, பினாங்கு இந்து சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தங்களுக்கு வந்த புகார்கள் அடிப்படையில், ஜனவரி 26-ஆம் தேதி நடத்தப்பட்ட ஆய்வில், 15 பொருட்களின் விலை 14 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை உயர்ந்தது கண்டறியப்பட்டதாக, அதன் தலைவர் டத்தோ பி. முருகையா கூறினார்.
தக்காளி மற்றும் மாம்பழம் ஒரு மாதத்தில் இரட்டிப்பு விலைக்கு சென்றுள்ளன.
இஞ்சி 87 விழுக்காடும், கத்தரிக்காய் 71 விழுக்காடும், வெண்டைக்காய், முட்டைகோஸ், முருங்கைக்காய் ஆகியவை 40 முதல் 50 விழுக்காடு வரையிலும் உயர்ந்துள்ளன.
தேங்காய், மிளகாய், வெங்காயம், cauliflower, எலுமிச்சை, கேரட் ஆகியவற்றின் விலையும் அதிகரித்துள்ளது.
நிலைமை இவ்வாரிருக்க, தைப்பூசத்திற்கு விரதம் அல்லது நோன்பு கடைப்பிடிக்கும் பக்தர்களும், இலவச சைவ உணவு வழங்கும் கடைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை முருகையா சுட்டிக் காட்டினார்.
சந்தைகளில் விலைப்பட்டியல் பார்வைக்கு வைக்கப்படாதது, எடை இயந்திரம் வெளிப்படையாக இல்லாத குறித்தும் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, அதிகாரிகள் விலை கட்டுப்பாட்டை தீவிரமாக கண்காணித்து, அநியாய வியாபாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பினாங்கு இந்து சங்கம் வலியுறுத்துவதாக முருகையா சொன்னார்.



