
பத்து மலை, ஜனவரி-24-தைப்பூசத்துக்கு இன்னும் ஒரு வாரம் இருக்கும் நிலையில், இவ்வாண்டின் முதல் சஷ்டி விரதம் இன்று அனுசரிக்கப்படுவதால் பத்து மலையே விழாக் கோலம் பூண்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்கூட்டியே தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.
மேல்குகைக்கு பால் குடங்கள் ஏந்தியும், மயில் காவடிகள் அழகுக் காவடிகள், கரும்புக் காவடிகள் தூக்கியும் குடும்பம் குடும்பமாக திருமுருகப் பெருமானை தரிசித்தனர்.
பக்தர்கள் வெள்ளத்தால் இன்று விடியற்காலை 2 மணிக்கே ஒரு குட்டி தைப்பூசம் போல பத்து மலை காட்சியளித்தது.
எங்கும் ‘வேல் வேல்’ முழங்க முழங்க, காவடிகளுடன் உறுமிமேள இசையும் பக்திச் சூழலை மெருகூட்டியது.
ஏராளமானோர் முடிக்காணிக்கைச் செலுத்தியதையும் காண முடிந்தது.
பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
வாரக் கடைசி விடுமுறை என்பதால் இன்றும் நாளையும் இன்னும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 2026 தைப்பூசத் திருவிழா அதிகாரப்பூர்வமாகத் தொடங்குவதற்கு முன்பே, பத்து மலையில் தைப்பூசம் களை கட்டி விட்டது.



