வாஷிங்டன், டிசம்பர்-7,பிறப்பு விதிகம் தொடர்ந்து சரிந்து வருவதால் சிங்கப்பூரும் மற்ற பல நாடுகளும் காலப்போக்கில் அழிந்து விடும் எனக் கூறி, உலகக் கோடீஸ்வரர் இலோன் மாஸ்க் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
சிங்கப்பூரில் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ள நிலையில், அதற்குத் ரோபோக்கள் எனப்படும் மனித இயந்திரங்கள் தீர்வாக முடியுமா என X தளத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், மாஸ்க் அவ்வாறு கூறினார்.
மக்கள் தொகை சரிவால் உலக நாடுகள் குறிப்பாக வளர்ச்சியடைந்த நாடுகள், நீண்ட கால சமூகப் பொருளாதார சவாலை சந்திக்கும் என்பதற்கான ஓர் எச்சரிக்கையாகவே, இலோன் மாஸ்க்கின் அக்கூற்று பார்க்கப்படுகிறது.
நீண்ட காலமாகவே, மக்கள் தொகை பெருக்கத்தை தீவிரமாக ஊக்குவித்து வருபவரான மாஸ்க், உலகம் நிலைத்திருக்க வேண்டுமென்றால் பிறப்பு விகித சரிவுக்கு தீர்வு காண வேண்டுமென ஏற்கனவே பல முறை எச்சரித்துள்ளார்.
கடந்த 30 பத்தாண்டுகளாக சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதம் பெருமவில் சரிந்து வந்துள்ளது.
2023-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் குழந்தை பிறப்பு விகிதமானது வரலாற்றில் இல்லாத அளவுக்கு 0.97 ஆக வீழ்ச்சியுற்றது குறிப்பிடத்தக்கது.
அதாவது ஒரு பெண், ஒன்றுக்கும் குறைவான குழந்தையையே பெற்றுக்கொள்கிறார் என்றால், பலரும் ஒரு குழந்தை கூட பெறுவதில்லை என அர்த்தமாகிறது.
ஒரு சீரான மக்கள் தொகையை நிலைநிறுத்த, குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்தது 2.1-ராக இருக்க வேண்டும்.
ஆனால் சிங்கப்பூரில் அது 0.97 என பாதாளத்திற்கு வீழ்ச்சி கண்டிருப்பது எதிர்கால தலைமுறை குறித்த பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.