
கோலாப் பிலா, மார்ச் 27 – கோலாப் பிலா, ஜுவாசேவில் ( Juasseh) உள்ள ஒரு தொலைத்தொடர்பு துணை நிலையத்தில், தொப்புள் கொடியுடன் ஒரு ஆண் குழந்தையின் சடலம் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
மாலை சுமார் 6.30 மணியளவில், உள்ளூர்வாசி ஒருவர் தொலைபேசி மூலம் இது குறித்து போலீசிற்கு தகவல் தெரிவித்ததாக கோலாப் பிலா மாவட்ட போலிஸ் துணைத் தலைவர் Superintendan ஷம்ரோல் ஷா ரம்லி ( Shamrol Shah Ramli ) கூறினார்.
பிறகு கோலாப் பிலா மாவட்ட போலீஸ் தலைமையகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் அடங்கிய ஒரு குழு, நெகிரி செம்பிலான் போலீஸ் படையின் தடயவியல் பிரிவுடன் இணைந்து, ஆய்வு நடத்துவதற்காக சம்பவ இடத்திற்கு சென்றனர்.
தொப்புள் கொடி இன்னும் இணைக்கப்பட்டிருந்த நிலையில் இருந்த அக்குழந்தை இரண்டு நாட்களுக்கு முன் இறந்திருக்கலாம் என்பதோடு அதன் உடல் அழுகத் தொடங்கியிருப்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டது .
அக்குழந்தையின் உடலில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், வெளிப்புறக் காயங்களுக்கான எந்த அறிகுறியும் தென்படவில்லை.
குழந்தையின் அடையாளம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்பதோடு மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணை தொடர்கிறது என ஷம்ரோல் தெரிவித்தார்.



