
பாரிஸ், ஜன 8 – நேற்று பாரிஸிலிருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ்-சின் MH21 விமானம் இயந்திரக் காட்டியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் CDG எனும் Charles de Gaulle விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
ஏர்பஸ் A350 ரக அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டதாக முன்னதாக மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் உறுதிப்படுத்தியது.
பனி பொழிவு காரணமாக 45 நிமிடத் தாமதமாக உள்ளூர் நேரப்படி காலை 11.55 மணிக்கு விமானம் CDG விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. இருப்பினும் சிறிது நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு கண்டறியப்பட்டதால் பாதுகாப்புக் கருதி மேல் சோதனைக்காக பிற்பகல் 3.35 மணிக்குப் பாதுகாப்பாக தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டது.
உள்ளூர் நேரப்படி இன்று பிற்பகல் 1 மணிக்கு MH21D என்ற மாற்று விமானம் அங்கிருந்து புறப்பட உள்ளது.
பாதிக்கப்பட்ட சில பயணிகள் வேறு விமான நிறுவனங்களின் விமானம் மூலம் அனுப்பட்ட நிலையில் பிற பயணிகள் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பயணிகளின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விமானம் திருப்பிவிடப்பட்டதாகவும் அதனால் ஏற்பட்ட அனைத்து அசெளகரியங்களுக்கும் பயணிகளிடம் மன்னிப்பு கோருவதாகவும் மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.



