
வாஷிங்டன், ஆகஸ்ட் 7 – தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நேற்று அமெரிக்க விமான நிலையங்களில் தனது விமானங்களை நிறுத்திவைத்ததாக யுனைடெட் ஏர்லைன்ஸ் ( United Airlines ) தெரிவித்தது. மேலும் கூடுதல் விமான தாமதங்கள் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, தனது பிரதான விமானங்களை அவற்றின் புறப்படும் விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கிறோம் என்று அந்த விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது எடை கணக்கீட்டு அமைப்பில் யுனைடெட் ஏர்லைன்ஸ் செயலிழப்பை சந்தித்ததாக, இந்த விவகாரத்தை நன்கு அறிந்த ஒருவர் ராய்ட்டரிடம் தெரிவித்தார்.
யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானங்களைப் பாதித்த விவகாரம் தீர்க்கப்பட்டுள்ளது, பிரதான விமானங்கள் மீண்டும் புறப்படுகின்றன என்று விமான கண்காணிப்பு வலைத்தளமான Flight Radar24 இரவு 9.19 மணிக்கு சமூக ஊடகங்களில் தெரிவித்திருந்தது.
பல அமெரிக்க விமான நிலையங்களில் யுனைடெட் விமானங்களை நிறுத்திவைக்கும்படி அமெரிக்க கூட்டரசு விமான நிர்வாகம் இதற்கு முன் அறிவித்திருந்தது. Newark, Denver, Houston, Chicago உட்பட முக்கிய யுனைடெட் மைய விமான நிலையங்களில் விமானங்கள் நிறுத்திவைக்கப்பட்டதாக ஒழுங்குமுறை ஆணையத்தின் வலைத்தளம் தெரிவித்துள்ளது.
இரவு மணி 9.25 நிலவரப்படி, புதன்கிழமை 870 அல்லது 28 விழுக்காடு யுனைடெட் விமானங்கள் தாமதமாகிவிட்டதாக FlightAware இன் விமான கண்காணிப்பு தரவு தெரிவித்தது.