
பத்து பஹாட் டிசம்பர் 31 – சக தொழிலாளரை இரும்புக் கம்பியால் காயப்படுத்தி, பின்னர் அவரை அறைந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லாரி ஓட்டுனர் ஒருவர் இன்று மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு 1,700 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது.
அந்த அபராதத்தை அவர் செலுத்த தவறினால் அவருக்கு ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்படுமென்று நீதிமன்றம் எச்சரித்தது. இந்நிலையில் அந்த ஆடவர் அத்தொகையை உடனடியாக செலுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி Kampung Sri Desa, Ayer Hitam பகுதியிலுள்ள தொழிற்சாலை ஒன்றில் 52 வயது சக ஊழியரை கோபத்தில் இரும்புக் கம்பி வீசி காயப்படுத்தியது மட்டுமல்லாமல் கன்னத்தில் அறைந்தும் உள்ளார்.
காயமடைந்த ஊழியர் போலீசில் புகார் செய்ததையடுத்து, சந்தேக நபர் சம்பவ நாளிலேயே கைது செய்யப்பட்டு மேல் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.



