
கோலாலம்பூர், ஆகஸ்ட்-17- பெரிக்காத்தான் நேஷனலை வலுப்படுத்த, மூடா, உரிமை ஆகியக் கட்சிகள் அந்த எதிர்கட்சிக் கூட்டணியில் இணைய வேண்டுமென, பெஜுவாங் கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ முக்ரிஸ் மகாதீர் கூறியுள்ளார்.
நகர்ப்புற வாக்காளர்களைக் கவர இது பெரிதும் உதவுமென அவர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மலாய்க்காரர் அல்லாதோரின் வாக்குகளைப் பெரிக்காத்தான் நேஷனல் பக்கம் கவர்ந்திழுக்கக் கூடிய வகையில் ‘ஒரே கல்லில் இரண்டு மாங்காய்’ திட்டத்தின் ஒரு பகுதியாக இப்பரிந்துரை அமைவதாய் முக்ரிஸ் சொன்னார்.
மலாய் வாக்குகளைக் குவிப்பதில் பெர்சாத்துவும் பாஸ் கட்சியும் கவனம் செலுத்தும் நிலையில், நகர்ப்புறங்களில் 50 முதல் 60 தொகுதிகள் போட்டியிட பெஜுவாங் மற்றும் இதர சிறிய கட்சிகளுக்கு பெரிக்காத்தான் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் அழைப்பு விடுத்துள்ளார்.
அவ்வகையில், மூடா, ராமசாமியின் உரிமைக் கட்சி, வேதமூர்த்தியின் மலேசிய முன்னேற்றக் கட்சி, PSM போன்றவை வந்திணைய வேண்டும். இதன் வழி மலாய்க்காரர் அல்லாதோரின் வாக்குகளைப் பிரித்து, வெற்றித் தோல்வியை நிர்ணயிப்பது மலாய்க்காரர்களே என்ற நிலையை உருவாக்க முடியும்.
உதாரணத்திற்கு, கிராமப்புறங்களில் மலாய் வாக்குகள் பிரியும் போது, மலாய்க்காரர் அல்லாதோரே வெற்றியை நிர்ணயிக்கின்றனர். அதே யுக்தியை நகர்ப்புறங்களில் பயன்படுத்துவதில் என்ன தவறு என முக்ரிஸ் கேட்டார்.
வேதமூர்த்தி, ராமசாமி போன்றோருடன் கொள்கை சார்ந்த பிரச்னை இருந்தாலும், தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு அவர்களுடன் இணங்கிப் போவதில் தமக்குப் பிரச்னை இல்லை என்றும் முக்ரிஸ் கூறினார்.
தனது தந்தையார் துன் மகாதீரும் டத்தோ ஸ்ரீ அன்வாரும் மனக்கசப்புகளை மறந்த காரணத்தால் தான் 61 ஆண்டு கால தேசிய முன்னணி ஆட்சியை 2018-ல் முடிவுக்குக் கொண்டு வர முடிந்ததை அவர் சுட்டிக் காட்டினார்.
ஒன்றுபட்டால் புத்ராஜெயாவைக் கைப்பற்றலாம்; இல்லையென்றால் நன்மை அடையப் போவது வேறு யாரோ என்றார் அவர்.