
கோலாலம்பூர், டிசம்பர் 24-மாண்புமிக்க அரசியலமைப்பு, அரச உத்தரவு மற்றும் நீதிமன்ற செயல்முறைகளை கேலி செய்வதா என DAP தலைவர்களை, ம.இ.கா தேசியத் தலைவர் தான் ஸ்ரீ எஸ். ஏ. விக்னேஸ்வரன் கண்டித்துள்ளார்.
டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் வீட்டுக் காவல் மனு நிராகரிக்கப்பட்டதை அரசியல் வெற்றியாகக் கொண்டாடுவது, உண்மையில் அரச உத்தரவைக் சிறுமைப்படுத்துவதாகும் என்றார் அவர்.
நீதிமன்றம் என்பது பிரபலங்களின் போட்டி அல்ல, மாறாக அரச உத்தரவு மீதான சட்ட விளைவுகளை உட்படுத்தியது என அவர் நினைவுறுத்தினார்.
பக்குவப்பட்ட ஜனநாயகத்தில் மரியாதை, கண்ணியம், பொறுப்பு ஆகியவை முதன்மையானவையாகும்.
எனவே நீதியை பொழுதுபோக்காக மாற்றக் கூடாது எனவும் விக்னேஸ்வரன் எச்சரித்தார்.
நஜீப்பின் வீட்டுக் காவல் மனு நிராகரிக்கப்பட்டதும், “ஆண்டு இறுதியை கொண்டாட இன்னொரு காரணம்” என பூச்சோங் எம்.பியும் DAP முன்னாள் அமைச்சருமான Yeo Bee Yin ஃபேஸ்புக்கில் பதிவிட்டது பெரும் சர்ச்சையாகியுள்ளது.
அவரைக் கண்டித்து அம்னோ – தேசிய முன்னணித் தலைவர்கள் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர்.



